ஆதித்ய வர்மா- திரைப்பட விமர்சனம்
தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக ’ஆதித்ய வர்மா’ இருந்தது. இதற்கு காரணம், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்பது தான். இப்படி ஏராளாமான எதிர்ப்பார்ப்புகளை துருவும், ஆதித்ய வர்மா படமும் பூர்த்தி செய்ததா, இல்லையா, என்பதை பார்ப்போம்.
மருத்துவக் கல்லூரி மாணவரான துருவ் விக்ரமுக்கும், தனது ஜூனியர் மாணவியான பனிட்டா சந்துவுக்கும் காதல் ஏற்படுகிறது. வழக்கமான காதல், டூயட், கனவு என்று இல்லாமல், அதிரடியான காதலை வெளிப்படுத்தும் துருவும், பனிதாவும் பலமுறை உடலறவு வைத்துக் கொள்வது, பார்க்கும்போதெல்லாம் இருவரது உதடுகளும் உரசிக்கொள்வது, என காதலின் உச்சத்திற்கே செல்பவர்கள் ஒரு கட்டத்தில், ஒருவரை விட்டு ஒருவர் சில நாட்கள் கூட பிரிந்திருக்க முடியாதபடி காதலில் ஐக்கியமாகி விடுகிறார்கள்.
இதற்கிடையே, பனிதாவின் அப்பா ஜாதியை காரணம் காட்டி தொடர்ந்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர், ஒரு கட்டத்தில் பனிதாவுக்கு திடீர் திருமண ஏற்பாடு செய்துவிடுகிறார். பல முறை பனிதாவுக்காக அவரது அப்பாவிடம் பேசி தோற்றுப் போகும் துருவ், அதை தாங்க முடியாமல், போதை பொருளை பயன்படுத்தி சுழநினைவை இழக்க, அந்த நேரத்தில் பனிதாவுக்கு திருமணமும் நடந்துவிடுகிறது. இதனால், பனிதாவை மறக்க முடியாமல் போதைக்கு அடிமையாகும் துருவ், அந்த போதையால் தனது வாழ்க்கையை மொத்தமாக இழக்கும் வேலையில், மீண்டும் பனிதாவை சந்திக்க, அதன் பிறகு துருவின் வாழ்க்கை என்ன ஆனது என்பது தான் படத்தின் கதை.
காதல் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று என்றாலும், அதை சொல்லும் விதத்தில் தான் அப்படம் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாக அமைகின்றது. அந்த வகையில், ‘ஆதித்ய வர்மா’ வின் காதல் அழுத்தமானதாக மட்டும் இன்றி, ஒரு பெண்ணை இப்படியும் வெறித்தனமாக காதலிக்க முடியுமா! என்ற ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது.
ஆதித்ய வர்மா என்ற கதாபாத்திரத்தில் மருத்துவ மாணவராகவும், அறுவை சிகிச்சை நிபுணராகவும் துருவ் விக்ரம் அசத்துகிறார். விக்ரமின் மகன் என்று வார்த்தைகளால் சொல்ல தேவையில்லை, அவரது நடிப்பு மட்டும் இன்றி, ஒவ்வொரு அசைவும் அதை சொல்கிறது. முதல் படம் போல அல்லாமல் நடிப்பில் மிரட்டுகிறார். விக்ரமின் திறமையை நிரூபிக்க பல படங்கள் தேவைப்பட்டாலும், அவரது மகன் துருவ், தனது முதல் படத்திலேயே தனது திறமையை நிரூபித்துவிட்டார்.
அனைவரிடத்திலும் கோபப்படுவது, காதலியை கொஞ்சுவது, வெறித்தனமாக நடந்துக் கொள்வது, பெண்களிடம் நேரடியாக பேசுவது என்று அனைத்து ஏரியாவிலும் எனர்ஜியோடு நடிக்கும் துருவ் விக்ரமின், குரலும் அவரது நடிப்பை போல கம்பீரமாக இருக்கிறது. காதல் படத்திற்கு பொருந்தும் துருவ், ஆக்ஷன் படங்களை தாங்குவதற்கான பலத்தையும் தன் நடிப்பில் காட்டிவிடுகிறார். மொத்தத்தில், தமிழ் சினிமாவுக்கு ஒரு ஹான்ஸம் கம் எனர்ஜிட்டிக் ஹீரோ கிடைத்துவிட்டார்.
ஹீரோயின் பனிட்டா சந்து, ஆரம்பத்தில் படத்துடன் ஒட்ட மறுத்தாலும், கிளைமாக்ஸில் தனது நடிப்பால் சபாஷ் வாங்கிவிடுகிறார். இருந்தாலும், அவரது அமைதியான முகமே அவரை காதலிக்க தூண்டுகிறது.
பிரியா ஆனந்த், துருவின் நண்பராக நடித்திருக்கும் அன்புதாசன், ராஜா, அச்யுத் குமார் என அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவும், ரதனின் இசையும் காதல் காட்சிகளில் வலிகளை உணரச் செய்கிறது.
பலர் உணர்ந்த காதல் தோல்வியின் வலியை துருவ் விக்ரம், தனது நடிப்பு மூலம் ரசிகர்களிடம் எளிதில் கடத்தி விடுவது தான் இப்படத்தின் பலம். தெலுங்கில் வெற்றி பெற்ற படம் என்பதால் அதன் எசன்ஸ் படம் முழுவதும் இருக்கிறது. ஆனால், துருவின் நடிப்பு பல இடங்களில், இது ரீமேக் படம் என்பதை மறக்கடிக்க செய்துவிடுகிறது.
படத்தின் முதல் பாதியில் சற்று தொய்வு ஏற்பட்டாலும், அதனை துருவ் தனது நடிப்பு மூலம் சரிகட்டிவிடுகிறார். இப்படி பல இடங்களில் துருவின் நடிப்பு திரைக்கதைக்கு பிளஸாக இருந்தாலும், கதாபாத்திரங்கள் அதிகமாக ஆங்கிலத்தில் பேசுவது மைனஸாக இருப்பதோடு, சில இடங்களில் என்ன பேசுகிறார்கள், என்றே புரியாமல் போகிறது.
இருந்தாலும், படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் இளைஞர்கள் கொண்டாடும் வகையில் இயக்குநர் கிரிசாயா கையாண்டிருக்கிறார். குறிப்பாக காதல் தோல்வியால் போதைக்கு அடிமையானாலும், காதலிலும், மருத்துவ தொழிலிலும் ஆதித்ய வர்மா, எப்படி நேர்மையை கடைபிடிக்கிறார், என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர், திருமணம் என்பது காதலைவிட சக்தி வாய்ந்ததா? என்ற கேள்வியை ரசிகரகளிடத்தில் கேட்டதோடு, உண்மை காதல் என்றால், அதற்கு எப்போதும் உயிர் உண்டு என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.\
மொத்ததில், காதல் உணர்வை வேறு ஒரு பரிமானத்தில் காட்டியிருக்கும் இந்த ‘ஆதித்ய வர்மா’ இளைஞர்கள் மனதில் நிச்சயம் இடம் பிடிப்பார்.
-ரேட்டிங் 4/5