முல்லைப்பெரியாறு அணை எல்லா வகையிலும் பாதுகாப்பாக இருக்கிறது – அமைச்சர் தகவல்
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக கேரள மாநிலம் இடுக்கி காங்கிரஸ் எம்.பி, டீன் குரியகோஷ் கேள்வி எழுப்பினார்.
அணையின் பாதுகாப்புக்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? அணையில் உடைப்பு ஏற்பட்டால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும், கேரள மக்களுக்கு பேரிடராக அமையும் என்பதால் இந்த விஷயத்தில் மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும், என எம்பி குரியகோஷ் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத், முல்லைப்பெரியாறு அணை எல்லா வகையிலும் பாதுகாப்பாக இருப்பதாக கூறினார்.
‘உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பருவமழைக்கு முன்பும் பின்பும் அணையின் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு பாதுகாப்புத் தன்மை உறுதிப்படுத்தப்படுகிறது. அதன்படி கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட ஆய்வின்படி அணை முழுவதும் பாதுகாப்பாக இருக்கிறது. அணையில் மேற்கொண்டு பராமரிப்பு பணிகளை செய்வதற்கு கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்று மத்திய மந்திரி ஷெகாவத் தெரிவித்தார்.