ஆடியோவில் இருப்பது என் குரல் அல்ல – அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு
‘மீடூ’ விவகாரம் ஏற்கனவே நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் இளம்பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், அவரது கருக்கலைப்பு தொடர்பாக அந்த பெண்ணின் தாயாருடன் அவர் பேசும் ஆடியோ இது தான் என்றும் சமூக வலைதளங்களில் நேற்று ஒலிநாடா ஒன்று பரபரப்பாக சுற்றி வந்தது.
ஆனால், இதை அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டமாக மறுத்தார். இந்த விஷயம் தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை நான் கடுமையாக எதிர்க்கும் காரணத்தினால் என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எப்படியாவது களங்கம் கற்பிக்கவேண்டும் என்ற வகையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாகவே ஒரு நட்சத்திர ஓட்டலில் நான் யாருடனோ இருப்பது போன்று போலியான புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் வெளியிட்டார்கள். பேஸ்புக் சமூக வலைத்தளத்திலும் பரப்பினார்கள். அது உடனடியாக என் கவனத்துக்கு வந்து, சைபர் கிரைமில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதோடு அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அதில் தோல்வியடைந்தவர்கள் அந்த குடும்பத்தை நான் முழுமையாக எதிர்க்கின்ற காரணத்தால், என்னை நேரடியாக எதிர்க்கின்ற திராணி இல்லாதவர்கள், ஒரு ஆடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். இப்போது தொழில்நுட்பம் எப்படி வளர்ச்சியடைந்திருக்கிறது என்று உங்களுக்கே தெரியும். வீடியோவிலேயே போலியான ஆள் ஒருவர் இருப்பது போன்று செய்யலாம். ஆடியோவிலும் போலியாக பேசுவது போன்று செய்யலாம். அப்படி ஆடியோவை போலியாக சித்தரித்து வாட்ஸ்-அப்பில் பரப்பியிருக்கிறார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
இதன் பின்னணியில் யார், யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்கள் சட்டத்தின் முன் பதில் சொல்லவேண்டியவர்கள். எனவே, சட்டப்படி அதனை எதிர்கொள்வதற்கு நானும் தயாராக இருக்கிறேன். வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் போட்டவர்கள் நிச்சயம் அந்த கும்பல் தான். தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணல் கொடுக்கும்போது என்னிடம் ஒரு ஆடியோ இருக்கிறது என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். போலியாக தயாரித்திருக்கிறார்கள். மிகவும் கெட்டிக்காரர்கள்.
அந்த கூட்டமே ஒரு மோசடி மற்றும் ஏமாற்றும் கூட்டம். அப்படி இருக்கும்போது இது அவர்களுக்கு கைவந்த கலை. இதற்கு எல்லாம் அஞ்சுகிறவர்கள் நாங்கள் அல்ல. சிங்கங்கள். எதையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். சட்டத்தின் மூலம் நாங்கள் எதிர்கொள்வோம். அதற்கு அவர் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- நீங்கள் வழக்கு தொடருவீர்களா?
பதில்:- நிச்சயமாக வழக்கு தொடருவேன். போலீசில் புகாரும் கொடுப்பேன்.
கேள்வி:- இந்த விவகாரத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்?
பதில்:- வெளிப்படையாக சசிகலாவின் குடும்பத்தினர் தான் இதன் பின்னணியில் இருக்கிறார்கள். டி.டி.வி.தினகரன் சார்ந்தவர்கள், அவர் தான் மாபியா கும்பலே… அவர்கள் குடும்பத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன். எதிர்க்கிறேன் என்றால் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க.வினரின் உணர்வு, எண்ணம் மற்றும் குரல்களை பிரதிபலிக்கின்றேன். அதனால் என் மீது அவதூறு பரப்பும் வகையில் இதுபோன்ற ஆடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். நிச்சயமாக இதற்கு அவர்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.
கேள்வி:- ஆடியோவில் உள்ளது போன்று நீங்கள் யாரிடமும் பேசியதே கிடையாதா?
பதில்:- கிடையவே கிடையாது. சவாலாக சொல்கிறேன் இப்படி நான் பேசியதே கிடையாது.
கேள்வி:- பிறப்பு சான்றிதழில் உங்கள் பெயர் போடப்பட்டிருக்கிறதே?.
பதில்:- உங்கள் (செய்தியாளர்) பெயர் கூட அதில் போடலாம். என்னுடைய கையெழுத்தா அதில் இருக்கிறது? டி.ஜெயக்குமார் என்று நான் ஒருத்தானா இருக்கிறேன்? இது ஒரு திட்டமிட்ட சதி. இதுபோன்ற சதிகளை நான் 1982-ம் ஆண்டில் இருந்தே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். இது ஒரு விஷயம் கிடையாது.
கேள்வி:- ஆடியோ விவகாரத்தில் பரிசோதனைக்கு நீங்கள் தயாரா?
பதில்:- நான் 100 சதவீதம் தயாராகத்தான் இருக்கிறேன்.
கேள்வி:- எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இழுக்க பார்ப்பதால் டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதிக்கு அழைத்து செல்லப்பட உள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்:- மறைந்திருந்து கிரிமினல் வேலைகளை செய்வதில் டி.டி.வி.தினகரனுக்கு நிகர் டி.டி.வி.தினகரன் தான். எங்கு மறைத்து வைத்தாலும் சரி, சீப்பை மறைத்து வைத்தால் கல்யாணம் நிற்குமா? கண்டிப்பாக நிற்காது. அ.தி.மு.க. அரசை காப்பாற்றுவதற்கு கண்டிப்பாக அந்த 18 பேரும் திரும்புவார்கள். மறைத்து வைக்கலாம் ஆனால் அது நடக்காத காரியம். சசிகலாவை ஜெயிலில் பார்ப்பதற்கு ‘டோக்கன் செல்வன்’ சென்றிருக்கிறார். முன்னோட்டமாக அங்கு நானும் வருகிறேன் என்று சொல்வதற்கு தான் சென்றிருக்கிறார்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.