பா.ஜ.க வில் சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகை ஜெயலட்சுமி!
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஜெயலட்சுமி. வழக்கறிஞரான இவர் ‘வேட்டைக்காரன்’, ‘பிரிவோம் சந்திப்போம்‘, ‘குற்றம் 23’, ‘விசாரணை’, ‘அப்பா’, ’முத்துக்கு முத்தாக’, ‘கோரிப்பாளையம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘முள்ளும் மலரும்’ தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.
திரையுலக பிரபலங்கள் பா.ஜனதா கட்சியில் இணைந்து வரும் நேரத்தில், ஜெயலட்சுமியும் நேற்று இணைந்துள்ளார். பா.ஜனதாவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பா.ஜனதாவில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் பதிவில், “திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகையும், வழக்கறிஞருமான ஜெயலட்சுமி இன்று தன்னை பா.ஜனதாவில் இணைத்து கொண்டார்.
பிரதமர் மோடியின் ஆட்சி மற்றும் அவரது திட்டங்கள் மீதான ஈர்ப்பு தன்னை பா.ஜனதாவில் இணைத்து கொள்ள காரணம் என தெரிவித்தார்” என்று தெரிவித்துள்ளார்.
பா.ஜனதாவில் இணைந்தது பற்றி ஜெயலட்சுமி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
‘மொபைல் செயலி மூலமாக பா.ஜனதா உறுப்பினராக தான் இருக்கிறேன். பொன்.ராதாகிருஷ்ணனை சந்திக்க நேரம் கேட்டவுடன் கொடுத்தார். எனவே நேரில் சென்று பா.ஜனதா உறுப்பினராக இணைத்து கொண்டேன். பிரதமர் மோடி செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து வருகிறேன். அவருடைய மிகப்பெரிய ரசிகை.
திருக்குறளைப்பற்றி பேசுவதும், திருவள்ளுவர் பற்றி பேசுவதும், சீன அதிபரைச் சந்திக்கத் தமிழ்நாட்டைத் தேர்வு செய்தது என ஒவ்வொரு விஷயத்தையும் பார்க்கும் போது பெருமையாக இருந்தது.
தேசியக் கட்சிகள் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. கண்டிப்பாக பாஜகவில் தான் சேர வேண்டும் என்ற முடிவுடன் இருந்தேன். அதற்கான நேரம் இப்போது அமைந்துவிட்டது. பாஜக சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும், அக்கட்சியை வளர்ப்பதற்கு எனது பெரிய பங்கு இருக்கும். தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்’.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.