டெல்லியில் மீண்டும் பள்ளிகள் திறப்பு!
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு, அபாய அளவைத் தாண்டியதால் கடந்த 1-ம் தேதி மருத்துவ அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இதனால் கனகர வாகனங்கள் மற்றும் அதிக புகையை வெளியிடும் தொழிற்சாலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது.
காற்று மாசினால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் டெல்லி, நொய்டா, காசியாபாத், பரிதாபாத் மற்றும் குர்கான் ஆகிய பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக டெல்லியில் காற்றின் தரம் ஓரளவு சீரடைந்து, காற்றின் தர அளவு 400-ஐ விட குறைந்தது. இதனால் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
எனினும் காலையில் எதிரே வரும் நபர் தெரியாத அளவிற்கு பனிப்புகை சூழ்ந்திருந்ததை பார்க்க முடிந்தது. பனிப்புகை மற்றும் காற்று மாசில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மாணவர்கள் பலர் மாஸ்க் அணிந்து பள்ளிக்கு சென்றனர்.
டெல்லியின் லோதி பகுதியில் காற்று மாசு பிஎம் 2.5 அளவு 279 ஆகயவும், பிஎம் 10 அளவு 250 ஆகவும் இருந்தது. இது மோசமான அளவு என்பது குறிப்பிடத்தக்கது.