Tamilசினிமா

ஷாருக்கானின் 54வது பிறந்தநாள் – கவுரப்படுத்திய துபாய் அரசு

சுற்றுலாவாசிகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் துபாய் நாட்டில் உலகின் மிக உயரமான ‘புர்ஜ் கலிபா’ கட்டிடம் அமைந்துள்ளது.

124 மாடிகளை கொண்ட ‘புர்ஜ் கலிபா’ கட்டிடத்தில் நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் நீச்சல் குளங்கள் என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இது 2,717 அடி (828 மீட்டர்) உயரம் கொண்டது.

முழுவதும் கருப்பு நிற சலவை கற்கள், எவர்சில்வர் மற்றும் கண்ணாடிகளால் இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 124 மாடிகளுக்கும் செல்லும் வகையில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் லிப்ட் வசதிகள் இங்கு உள்ளன. இந்த கட்டிடத்தை ஒட்டியுள்ள நீர்நிலையில் லேசர் ஒளிவெள்ளத்தில் இசைக்கேற்ப நடனமாடும் அழகிய நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது.

‘புர்ஜ் கலிபா’ மற்றும் துபாயில் உள்ள பல்வேறு பொழுதுப்போக்கு அம்சங்களுக்காக உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாவாசிகள் ஆண்டுதோறும் இங்கு வருகின்றனர்.

துபாய் மாநகராட்சின் சுற்றுலாத்துறை தூதராக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.’எனது விருந்தினராக வாருங்கள்’ என்று துபாய்க்கு மக்களை அழைக்கும் 3 நிமிட விளம்பரப்படத்தில் இவர் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், ஷாருக்கானின் 54-வது பிறந்தநாளையொட்டி துபாயில் உள்ள உலகின் மிக உயரமான ‘புர்ஜ் கலிபா’ கட்டிடத்தில் நேற்றிரவு லேசர் ஒளியால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

’பாலிவுட்டின் மன்னன் ஷாருக்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்று அந்த கட்டிடம் லேசர் ஒளியில்
ஒளிரத் தொடங்கியதும் அங்கிருந்தவர்கள் கரவொலி எழுப்பினர். மேலும், ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஓம் சாந்தி ஓம்’ படப்பாடலின் பின்னணியில் நடனமாடிய நீருற்று அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஷாருக்கான் புர்ஜ் கலிபா கட்டிடத்தின் உரிமையாளரான எனது சகோதரர் முஹம்மது அலாபருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

என்னை இத்தனை பிரகாசமாக ஒளிர வைத்ததற்கும் நான் எப்போதும் இருந்திராக உயரத்தில் என்னை வைத்ததற்கும் எனது சகோதரர் முஹம்மது அலாபருக்கு நன்றி. உங்களது அன்பும், கனிவும் அளப்பரியது. துபாயை நான் நேசிக்கிறேன். இது என்னுடைய பிறந்தநாள், நான் உங்கள் விருந்தாளி’ என ஷாருக்கான் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *