தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதால் தென் மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது.
இதன் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியதால் உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு வடக்கு நோக்கி நகர்ந்ததால் தமிழ்நாட்டில் இன்று பல இடங்களில் வெயில் அடித்தது. மழையின் தாக்கம் ஓரளவு குறைந்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நேற்று மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென் மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசையை நோக்கி நகர்ந்து இன்று ஆந்திரா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.
இதைபோல் அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.
ஒகேனக்கலில் அதிகபட்சமாக 9 சென்டி மீட்டர், குப்பனாம்பட்டியில் 7 சென்டி மீட்டர், முண்டியம்பாக்கத்தில் 6 செ.மீ., உசிலம்பட்டியில் 5 செ.மீ., அருப்புக்கோட்டை, ஏற்காட்டில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
மற்ற மாவட்டங்களில் 1 முதல் 2 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகரில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.