ஹர்பஜன் சிங்கை முந்தப் போகும் அஸ்வின்
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் அஸ்வின். 33 வயதான சென்னையை சேர்ந்த அவர் டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்களில் 4-வது இடத்தில் உள்ளார்.
ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டத்திற்கான இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட அஸ்வின் டெஸ்டில் மட்டுமே ஆடி வருகிறார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் அவரது பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருக்கிறது. அஸ்வின் 14 விக்கெட் கைப்பற்றி இரண்டு டெஸ்டிலும் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.
விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டில் 8 விக்கெட்டும் (முதல் இன்னிங்சில் 7 +இரண்டாவது இன்னிங்ஸ் 1), புனேயில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட்டும் (முதல் இன்னிங்சில் 4 + இரண்டாவது இன்னிங்ஸ் 2) எடுத்தார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 50 விக்கெட்டை கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் 4-வது இடத்தை பிடித்தார். 9 டெஸ்டில் அவர் 52 விக்கெட்டை தொட்டார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்களில் 3-வது இடத்தில் உள்ள ஹர்பஜன்சிங்கை முந்துவது தற்போது அஸ்வினின் இலக்காக இருக்கிறது. ஹர்பஜன்சிங் 11 டெஸ்டில் 60 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
அவரை முந்துவதற்கு அஸ்வினுக்கு இன்னும் 9 விக்கெட் தேவை. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வருகிற 19-ந்தேதி தொடங்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்டில் அவர் இந்த விக்கெட்டை எடுத்து சாதிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்வின் 67 டெஸ்டில் விளையாடி 356 விக்கெட் கைப்பற்றி உள்ளார். கும்பளே 619 விக்கெட்டுடன் முதல் இடத்திலும், கபில்தேவ் 434 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும், ஹர்பஜன்சிங் 417 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தப்படியாக அஸ்வின் உள்ளார்.
அஸ்வினுக்கு போதுமான வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்த ஆண்டில் அவர் இதுவரை இரண்டு டெஸ்டில் மட்டுமே ஆடினார். அடுத்து வங்காளதேசத்துடன் உள்ளூரில் 2 டெஸ்டில் விளையாடுகிறார். இதனால் அஸ்வின் விரைவில் 400 விக்கெட்டை எடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.