பெண்களுக்கான படமாக உருவாகியுள்ள சேரனின் ராஜாவுக்கு செக்
பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராஜாவுக்கு செக்’. இப்படத்தில் சேரன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சராயூ மோகன், நந்தனா வர்மா நடிக்க, முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். ’ஜெயம்’ ரவி நடித்த ‘மழை’ என்கிற படத்தை இயக்கிய சாய்ராஜ் குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதில் இயக்குநர் சேரன் பேசியதாவது: “இந்தத் திரைப்படத்தில் என்னைத் தவிர அத்தனைப் பேரும் மிக அதிகமாக உழைத்திருக்கிறார்கள். இப்படத்தின் இயக்குநர் உள்பட பலரும் ஒரு அங்கீகாரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நிச்சயம் அந்த அங்கீகாரம் கிடைக்கும். நான் படத்தைப் பார்த்துவிட்டேன். உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருந்தால் நிச்சயம் அந்தக் குழந்தைகளோடு வந்து படத்தைப் பார்க்க வேண்டும்.
என் நண்பர் எம்.எஸ்.பிரபு, கதைக்குள் அடங்குகிற கேமராமேன். அவர் இப்படத்தின் அசோஸியட் டைரக்டர் போல வேலை செய்துள்ளார். இப்படத்திற்கு தியேட்டர்கள் சரியாக கிடைக்க வேண்டும். இப்படத்தைப் பார்த்ததும் நம் உறவுகளின் கையைப் பிடிப்பதைப் போல் உணர்வீர்கள்” என்றார்.