Tamilசெய்திகள்

‘சந்திராயன் 2’ தோல்வி அடையவில்லை – மயில்சாமி அண்ணாதுரை

நம்பியூர் அருகே உள்ள வேம்பாண்டாம் பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் புதிய கலை அரங்கம், வாழ்நாள் சாதனையாளர், பள்ளி ஆண்டு விழா என முப்பெரும் விழா நடந்தது.

பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பலமுரளி வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.

சந்திரயான்-2 நிலவுக்கு அனுப்பியதில் சில சறுக்கல்கள் ஏற்பட்டு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. இது நிரந்தரம் இல்லை. சில சறுக்கல்கள் வரத்தான் செய்யும். தொடர் முயற்சி வெற்றியை கொடுக்கும்.

நான் அரசு பள்ளியில் படித்ததால் தான் இந்த உயரத்துக்கு வர முடிந்தது. என்னால் சுயமாக சிந்திக்க முடிந்தது. அப்போது போதிய வசதிகள் இல்லை. இன்றைய மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதனால் வாழ்க்கையில் முன்னேறலாம்.

வாய்ப்புகள் கிடைக்காமல் பலர் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள். வருங்காலத்தில் தாய்நாட்டில் தாய், தந்தை முன்பு சாதனைகள் உருவாக்க முடியும். அதற்கான சூழலில் உருவாகி வருகிறது. யாரும் பிறக்கும்போது அறிவாளிகளாக பிறப்பது இல்லை. சரியான வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்பவர்கள் உயர்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *