இந்திய பொருளாதாரம் வலுவாகவே உள்ளது – மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று பிரசாரம் செய்தார். மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், ‘விடுமுறை தினமான கடந்த 2-ந் தேதியில் (காந்தி ஜெயந்தி) மட்டுமே 3 இந்தி படங்கள் ரூ.120 கோடி வருமானம் ஈட்டி உள்ளன. நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது என்றால் வெறும் மூன்று படங்களால் மட்டும் எப்படி ஒரே நாளில் இவ்வளவு பெரிய வசூலை குவிக்க முடியும்?’ என கேள்வி எழுப்பினார்.
பின்னர் இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், அரசுக்கு எதிரான சிலர்தான் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டதாக மக்களிடம் தவறான தகவல்களை பரப்புவதாக தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார மந்தநிலையை சீரமைக்க மத்திய அரசு துறைசார்ந்த தீர்வுகளை வழங்கி வருவதாக நிதி மந்திரியே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், பொருளாதாரம் வலுவாக இருப்பதாக சட்டத்துறை மந்திரி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.