டோனியே அணியைவிட்டு வெளியேற வேண்டும் – கவாஸ்கர்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்படாமல் விமர்சனத்துக்குள்ளான 38 வயது விக்கெட் கீப்பர் டோனி, வெஸ்ட்இண்டீஸ் பயணத்துக்கான இந்திய அணியில் இருந்து ஒதுங்கியதுடன் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் அவரது பெயர் பரிசீலனை செய்யப்படவில்லை. டோனி விரைவில் ஓய்வு பெறுவார் என்று செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அவர் இந்த விஷயத்தில் மவுனம் காத்து வருகிறார். இந்த நிலையில் அடுத்து நடைபெற இருக்கும் வங்காளதேசத்துக்கு எதிரான தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் டோனியை சேர்க்க வேண்டுமா? என்று கேட்டதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் பதில் அளிக்கையில் கூறியதாவது:-
வங்காளதேசத்துக்கு எதிரான தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் டோனியை சேர்க்க வேண்டியதில்லை. டோனியை ஒதுக்கி விட்டு அவருடைய இடத்துக்கு யாரை கொண்டு வர வேண்டும் என்பது குறித்து நாம் யோசிக்க வேண்டிய நேரம் இது. அடுத்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெற இருப்பதால் நிச்சயமாக இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்துக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.
ஒருவேளை ரிஷப் பந்த் சரியாக விளையாடவில்லை என்றால் என்னுடைய அடுத்த தேர்வு சஞ்சு சாம்சன் தான். அவர் நல்ல விக்கெட் கீப்பர் மட்டுமின்றி சிறந்த பேட்ஸ்மேனும் ஆவார். 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு இளம் வீரர்களை தான் முன்னெடுத்து செல்ல வேண்டும். இந்திய கிரிக்கெட்டுக்கு டோனி மகத்தான பங்களிப்பை அளித்து இருக்கிறார். இருப்பினும் அவரை தாண்டி அடுத்த வீரரை அந்த இடத்துக்கு கொண்டு வரவேண்டிய நேரம் இதுவாகும். டோனியை வலுக்கட்டாயமாக வெளியே தள்ளுவதற்கு முன்பாக அவரே சென்று விடுவார் என்று நினைக்கிறேன். டெஸ்ட் போட்டியை சிறப்பாக தொடங்கி இருக்கும் ரிஷாப் பண்டினை மேலும் மெருகேற்ற வேண்டும்.
அவர் செய்யும் தவறுகளை திருத்தி கொண்டு விடுவார்.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.