Tamilசெய்திகள்

அமித்ஷா கருத்து எதிர்ப்பு தெரிவித்த கமல்ஹாசன்

இந்தி திணிப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிருபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.
புதிய திட்டங்களோ, சட்டங்களோ இயற்றப்படும் பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். வெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்திற்காக அல்ல ஜனநாயகத்திற்காக’ என கேப்ஷன் போட்டு பேசியது பின்வருமாறு:
பல ராஜாக்கள் தங்கள் ராஜ்ஜியங்களை விட்டுக் கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால், விட்டுக் கொடுக்க முடியாது என பல இந்தியர்கள், மாநிலங்கள் சொன்ன விஷயம் எங்கள் மொழியும், கலாச்சாரமும்.
1950ல் இந்தியா குடியரசானபோது அதே சத்தியத்தை அரசு மக்களுக்கு செய்தது. இதனை எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ திடீரென மாற்றிவிட முயற்சிக்கக் கூடாது. ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது சிறிய போராட்டம் சிறிய வெற்றி. எங்கள் மொழிக்காக நாங்கள் போராட துவங்கினால் அது, அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும்.
அது தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் தேவையற்றது. வங்காளிகளை தவிர பல இந்தியர்கள் தங்கள் தாய் மொழியிலேயே அவர்கள் தேசிய கீதத்தை பாடுவதில்லை. இருந்தாலும் அதனை சந்தோஷமாக பாடிக் கொண்டிருக்கிறோம்.
பாடிக் கொண்டு இருப்போம். இந்தியா என்பது அற்புத விருந்து. அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டி விடும். தயவுசெய்து அதை செய்யாதீர்கள். வேற்றுமையில் ஒற்றுமையை எங்களால் காண முடியும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *