இன்சமாமின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இரண்டாம் நாளான நேற்று முதல் இன்னிங்சில் 294 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 225 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் 80 ரன்கள் குவித்தார். ஸ்டீவ் ஸ்மித் சதத்தை தவறவிட்டாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக முறை அரை சதம் அடித்திருந்த பாகிஸ்தான் வீரர் இன்சமாம் உல் ஹக்கின் சாதனையை முறியடித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக், இங்கிலாந்துக்கு எதிராக 9 அரை சதம் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. ஸ்மித் 10 அரை சதம் அடித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார். ஒரு அணிக்கு எதிராக தொடர்ந்து 10 அரை சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஸ்டீவ் ஸ்மித் பெற்றுள்ளார்.
இந்த சாதனைப் பட்டியலில் 8 அரை சதங்களுடன் கிளைவ் லாயிட் (வெஸ்ட் இண்டீஸ் v இங்கிலாந்து), ஜாக்கஸ் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா v பாகிஸ்தான்), சங்ககாரா (இலங்கை v வங்கதேசம்) ஆகியோர் மூன்றாம் இடத்தை பகிர்ந்துள்ளனர்.