நானும் தவறு செய்துவிட்டேன் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
இந்திய அளவிலான வர்த்தக வாரியத்தின் உயர்மட்ட கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு பின்னர் பியூஷ் கோயல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடியாக உயர்த்தும் இலக்கை எட்டுவதை கணித பார்வையில் பார்க்கக்கூடாது. ஏனென்றால், புவிஈர்ப்பு விசையை கண்டுபிடிக்க ஐன்ஸ்டீனுக்கு கணிதம் உதவவில்லை’ என கூறினார்.
ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தார் என்பதற்கு பதிலாக ஐன்ஸ்டீன் என பியூஸ் கூறியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் தங்கள் கருத்துக்களை கிண்டலாக கூறினர்.
இந்த விவகாரம் குறித்து பியூஸ் கோயல் கூறுகையில், ‘டங்க் சிலிப் (நாக்கு குழறி) காரணமாக ஒரு தவறு அரங்கேறிவிட்டது. ஐசக் நியூட்டனுக்கு பதிலாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை கூறிவிட்டேன். நாம் அனைவரும் தவறு செய்யும் வாய்ப்பைப் பெறுகிறோம். தவறும் செய்து விடுகிறோம்.
உண்மையில் நான் தவறுதலாக ஐன்ஸ்டீன் பெயரை மேற்கோள் காட்டினேன். தவறு செய்யாத ஒரு நபர், எதையும் புதிதாக செய்ய முயற்சிப்பதில்லை. தவறு செய்வேன் என்று பயப்படுபவர்களில் ஒருவன் நான் அல்ல’ என கூறியுள்ளார்.