ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு தடையாக வந்த மழை
வங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வங்காளதேசத்தில் உள்ள சட்டோகிராம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 342 ரன் குவித்தது. வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 205 ரன்னில் சுருண்டது.
137 ரன்கள் முன்னிலையில் ஆப்கானிஸ்தான் 2-வது இன்னிங்சில் 260 ரன் எடுத்து ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் வங்காளதேச அணிக்கு 398 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் நேற்றைய 4-வது நாள் ஆட்டம் நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்து திணறிய நிலையில் இருந்தது.
வங்காளதேச வெற்றிக்கு மேலும் 262 ரன் தேவை. கைவசம் 4 விக்கெட் இருந்தது. வங்காளதேச அணியின் 4 விக்கெட்டை கைப்பற்றினால் வெற்றி பெறலாம் என்ற நிலை ஆப்கானிஸ்தானுக்கு இருந்தது. இன்றைய 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு ஏற்பட்டது. பலத்த மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
மழை காரணமாக ஆப்கானிஸ்தானின் வரலாற்று வெற்றிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் அயர்லாந்துடன் இணைந்து டெஸ்டில் விளையாட அங்கீகாரம் பெற்றது. அந்த அணி 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவுடன் தனது முதல் டெஸ்டில் விளையாடி இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்னில் தோற்றது. தனது 2-வது டெஸ்டில் அயர்லாந்துடன் ஆடி 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
தனது 3-வது டெஸ்டில் வங்காளதேசத்தை எதிர்கொண்டது. வங்காள தேசத்துக்கு எதிரான இந்த டெஸ்டில் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆப்கானிஸ்தானின் இந்த வரலாற்று வெற்றி மழையால் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.