Tamilசினிமா

ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை! – திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு

சினிமா டிக்கெட் கட்டணங்களை முறைப்படுத்தி அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது. மல்டி பிளக்ஸ் மற்றும் குளிர்சாதன திரையரங்குகளுக்கும் குளிர்சாதன வசதி இல்லாத திரையரங்குகளுக்கும் தனிதனி கட்டணங்கள் விதிக்கப்பட்டு உள்ளன. இதுபோல் ஆன்லைன் மூலம் டிக்கெட் கட்டணங்களை வெளிப்படையாக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தி வந்தது.

இந்த நிலையில் செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறும்போது, “தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் ஒரு நாளில் எத்தனை காட்சிகளில் எத்தனை டிக்கெட்டுகள் விற்கப்பட்டு உள்ளன என்பதை கண்காணிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய பரிசீலிக்கப்பட்டு வருகிறது. முதலில் சென்னை போன்ற பெருநகரங்களில் ஆன்லைன் டிக்கெட் விற்பனை நடைமுறைக்கு வரும்” என்றார். இதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது:- “தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் 15 முதல் 20 சதவீதம் டிக்கெட்டுகள்தான் ஆன்லைனில் விற்பனையாகிறது. மீதி 80 சதவீத டிக்கெட்டுகளை நேரில் வந்துதான் வாங்குகிறார்கள். அரசு கொண்டு வந்துள்ள நடைமுறையை ஆதரிக்கிறோம். அதே நேரம் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்க வேண்டும் என்பது சிரமமான காரியம்.

ஆன்லைன் என்றால் வங்கிக்கும். ஆன்லைன் கம்பெனிக்கும் ஒரு தொகையை மக்கள் கட்ட வேண்டி உள்ளது. பெரிய நகரங்களுக்கு இது சாத்தியம். நேரடியாக வாங்கும் டிக்கெட்டுகளுக்கு அரசே ஒரு சர்வர் ஏற்படுத்தினால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் கண்காணிக்க முடியும். ஆன்லைன் டிக்கெட் விற்பனை சிரமங்களை அமைச்சரை நேரில் சந்தித்து எடுத்துச் சொல்வோம்.

இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு நகராட்சி வரி 8 சதவீதம் விதிக்கப்பட்டு இருப்பதால் எங்களால் தொழில் செய்ய முடியவில்லை. அதை நீக்க வேண்டும். 4 ஆயிரமாக இருந்த தியேட்டர்கள் எண்ணிக்கை 834 ஆக குறைந்து விட்டது. ஒரு தியேட்டரை 3 அல்லது 4 தியேட்டராக மாற்ற அனுமதி கேட்டு மனுகொடுத்து உள்ளோம். அதை ஏற்றால் 4 ஆயிரம் தியேட்டர்களாக மாறும். அரசுக்கும் வருமானம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் கூறும்போது, ஆன்லைன் டிக்கெட் விற்பனைக்கு குறிப்பிட்ட கம்பெனியோடு ஏற்கனவே ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருப்பதால் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அமைச்சரை நேரில் சந்தித்து இதை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்” என்றார்.

நடிகை கஸ்தூரி கூறும்போது, “தியேட்டர் அதிபர்களுக்கும் மக்களுக்கும் இடையில் இடைத்தரகராக ஆன்லைன் தளம் உள்ளது. தியேட்டரில் நேரில் டிக்கெட் எடுக்க முடியாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. செல்போன், இன்டர்நெட் வைத்து இருந்தால் மட்டுமே சினிமா பார்க்க முடியும் என்பது உரிமை மீறல்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *