நாடு முழுவதும் ஒரே ரேசன் கார்டு – டெல்லியின் இன்று ஆலோசனை கூட்டம்
மத்திய அரசு சில முக்கிய திட்டங்கள், சேவைகளை நாடு தழுவிய அளவில் ஒரே மாதிரியான திட்டமாக மாற்றி வருகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும் “ஒரே ரேசன் கார்டு” அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது ஒவ்வொரு மாநிலமும், தங்களது துறைகள் மூலம் பொதுமக்கள் ரேசன் கடைகளில் மானிய விலையில் பொருட்களை வாங்குவதற்கு வெவ்வேறு விதமான நடைமுறைகளை கடைபிடித்து வருகிறது. வடமாநிலங்களில் பொது வினியோகத் திட்டத்தில் கோதுமை சார்ந்த உணவுப் பொருட்களுக்கு முக்கியத் துவம் கொடுக்கும் வகையில் ரேசன் கடைகள் இயங்குகின்றன.
ஆனால் தென்மாநிலங் களில் குறிப்பாக தமிழ்நாட்டில் அரிசியை முதன்மையாக வழங்கும் வகையில் பொதுவினியோகத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து “ஒரே நாடு – ஒரே ரேசன் கார்டு” திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு விரும்புகிறது.
மத்திய அரசின் தீவிர முயற்சி காரணமாக ஆந்திரா, குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மராட்டியம், ராஜஸ்தான், தெலுங்கானா, திரிபுரா ஆகிய 10 மாநிலங்கள், “ஒரே நாடு – ஒரே ரேசன் கார்டு” திட் டத்தில் தங்களை இணைத்துள்ளன. மற்ற மாநிலங்களையும் இந்த பொது வினியோக திட்டத்துக்குள் இணைக்க மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கடந்த ஜூன் மாதம் இது தொடர்பாக டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது “ஒரே நாடு – ஒரே ரேசன் கார்டு” திட்டம்அமல் படுத்தப்பட்டால் எத்தகைய இடையூறுகள் ஏற்படும்? அந்த இடையூறுகளை எப்படி தவிர்க்கலாம்? என்று விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் “ஒரே நாடு – ஒரே ரேசன் கார்டு” திட்டம் பற்றி விவாதிக்க இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி விஞ்ஞான் பவனில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மத்திய உணவு மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் மாநில நுகர்வோர் விவகாரத்துறை மற்றும் உணவு, பொது வினியோகத்துறை அதிகாரிகளுடன் மத்திய அரசு அதிகாரிகள் “ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” திட்டம் பற்றி விவாதித்தனர். அதன்பின்னர் இந்த திட்டத்தை எதிர்காலத்தில் எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் அனைத்து மாநிலங்களும் விரைவில் இணைய வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு நுகர்வோர் துறை செயலாளர், பொது வினியோகத் திட்ட செயலாளர் பேசுகிறார்கள். ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை இந்தியா முழுவதும் அடுத்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்து நடைமுறை படுத்த வேண்டும் என்று அவர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். இதையடுத்து மாநில உணவுத்துறை அமைச்சர்கள் தங்கள் மாநில பிரச்சினைகள் பற்றி விளக்கம் அளிக்க உள்ளனர்.
தமிழ்நாட்டின் நிலைப்பாடு குறித்து உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் எடுத்துரைக்கிறார். தமிழக கூட்டுறவு, உணவுத்துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியாவும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
ஒரே நாடு – ஒரே ரேசன் கார்டு திட்டம் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று பல்வேறு தரப்பு நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் அரிசி வினியோகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் ஒரே விதமான கார்டு கொண்டு வந்தால் அது தமிழகத்தின் உணவுத்துறை திட்டங்களை முழுமையாக சிதைத்து விடக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான உணவுப் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டால், அது தமிழ் நாட்டு மக்களுக்கு ஏற்புடையதாக இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு காரணம், தமிழ்நாட்டு மக்களில் அனைத்துத் தரப்பினரும் ஏதாவது ஒரு பொருளை ரேசன் கடைகளில் இருந்து பெறுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
ஏழை-எளிய மக்கள் அரிசியையும், நடுத்தர மக்கள் மற்ற பொருட்களையும் ரேசன் கடைகளில் இருந்து வாங்குகிறார்கள். ஒரே ரேசன் கார்டு திட்டம் வந்தால் தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் அது பாதிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே ஒரே நாடு – ஒரே ரேசன் கார்டு திட்டத்தை தமிழக அரசு ஏற்குமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.
இவை தவிர ரேசன் கார்டுகள் மூலம் பல மக்கள் நல திட்டங்களையும், இலவச திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் திட்டத்தால் தமிழ்நாட்டில் கடும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக கருத்து உள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் ரேசன் அட்டைகள் மின்னணு முறைக்கு மாற்றப்பட்டு விட்டதாலும், குடும்ப அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டதாலும் ஒரே நாடு – ஒரே ரேசன் கார்டு திட்டத்தை தமிழக அரசால் மிக, மிக எளிதாக அமல்படுத்த முடியும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
ஆனால் தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த திட்டத்தை கொண்டு வர முடியுமா? என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. இன்று மாலை ஆலோசனை கூட்ட முடிவில் மத்திய உணவு மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நிருபர்களிடம் இது தொடர்பான விளக்கங்கள் அளிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.