விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் – இறுதிப் போட்டிக்குள் நுழைந்த டெல்லி
விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. 37 அணிகள் பங்கேற்ற இதில் லீக் மற்றும் கால் இறுதி போட்டிகள் முடிந்துள்ளன.
இந்நிலையில் பெங்களூருவில் நேற்று நடந்த 2-வது அரை இறுதி ஆட்டத்தில் டெல்லி ஜார்க்கண்ட் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, ஜார்கண்ட் அணி களமிறங்கியது. அந்த அணியின் விகாஸ் சிங் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 71 ரன்கள் எடுத்தார். ஆனந்த் சிங் 36 ரன்களும், ஷாபாச் நதிம் 29 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில், ஜார்க்கண்ட் அணி 48.5 ஓவரில் 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
டெல்லி அணி சார்பில் நவ்தீப் சைனி 4 விக்கெட்டும், குல்வந்த் கெஜ்ரோலியா, பிரான்ஷு விஜய்ரன் ஆகியோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. ஜார்க்கண்ட் அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கியது. அதனால் டெல்லி அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.
டெல்லி அணியின் நிதிஷ் ரானா மற்றும் பவன் நெகி ஆகியோர் 39 ரன்கள் எடுத்தனர். கவுதம் க ம்பீர் 27 ரன்களும் எடுத்தார்.
இறுதியில், டெல்லி அணி 49.4 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, இறுதி போட்டியில் நுழைந்தது.
நேற்று முன் தினம் நடந்த மற்றொரு அரை இறுதியில், ஐதராபாத் அணியை மும்பை அணி வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது.
பெங்களூருவில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை – டெல்லி அணிகள் மோதுகின்றன.