திமுக-வில் அதிரடி மாற்றம்! – உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடந்தது.
துணை செயலாளர்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி, அசன்முகமது ஜின்னா, அன்பில் மகேஷ், பொய்யா மொழி, பைந்தமிழ், பாரி, ஜோயல், துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்னை தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா வரவேற்றார்.
கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து மாநில, மாநகர, மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வேறுயாரையும் கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கவில்லை.
கூட்டம் தொடங்குவதற்கு முன்பு மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவ படத்துக்கு உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தி.மு.க. தலைவரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக மார்ச் 1-ந்தேதி இளைஞர்களை ஊக்குவிக்க மாவட்ட – மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளை இளைஞர் அணியின் சார்பில் நடத்துவது.
வரும் செப்டம்பர் 14-ந்தேதி முதல் நவம்பர் 14-ந்தேதிக்குள் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 10 ஆயிரம் பேருக்கும் குறையாமல் ஒட்டுமொத்தமாக 30 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்ப்பது.
15 முதல் 30 வயதுள்ளோர் இளைஞரணியில் உறுப்பினராகலாம் என்ற விதியை மாற்றி, 15 முதல் 35 வயதுள்ள இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கலாம் என்று தலைமைக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், உறுப்பினர்கள் அனைவருக்கும் புகைப் படத்துடன் கூடிய உறுப்பினர் அட்டை உடனுக்குடன் வழங்கப்பட உள்ளது.
தூர்வாரப்படாமல் பயன்பாடற்று கிடக்கும் நீர்நிலைகள், அதிக பிளாஸ்டிக் பயன்பாடுகள்… இப்படியான சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க நம் தி.மு.க. இளைஞரணி இனி அதிக கவனம் செலுத்தும்.
கட்சியின் கொள்ளைகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையிலும், தி.மு.க. அரசின் சாதனைகளை அவர்களுக்கு விளக்கும் வகையிலும், இயக்க முன்னோடிகளைக் கொண்டு மாவட்டந்தோறும் பயிற்சி பாசறைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
இளைஞரணி அமைப்பு மண்டல வாரியாகப் பிரிக்கப்பட்டு, நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் செய்யப்படும். அதைத் தொடர்ந்து 3 மாதங்களுக்கு மிகாமல் ஒரு மண்டல மாநாடு நடத்தப்படும். அனைத்து மண்டல மாநாடுகளும் முடிந்தபின், மிகப்பெரிய அளவில் இளைஞர் அணி மாநில மாநாடு நடத்தப்படும்.
லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி இருக்கும் நிலையிலும், இன்னும் பல லட்சக்கணக்கானோர் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் நிலையிலும், தமிழகத்தில் அஞ்சல், ரெயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன வேலை வாய்ப்புகளை வட மாநிலத்தவர்களுக்கு வாரி வழங்கும் துரோகத்தை மத்திய அரசு செய்து வருகிறது. இதற்கு அ.தி.மு.க. அரசும் துணை போகிறது.
மத்திய, மாநில அரசுகளை இளைஞர் அணியின் இந்த நிர்வாகிகள் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழகத்தில் அரசு வேலை வாய்ப்பில் தமிழருக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்துகிறது.
கலைஞரின் கனவு திட்டமாம் சமச்சீர் கல்வியை அழிக்கும் வகையிலும், கிராமப் புற பள்ளிகளை மூடி ஏழை- எளிய- நடுத்தர மாணவர்களின் கல்விக் கனவை சிதைக்கும் வகையிலும், தயாரிக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கை வரையரையை கண்டிப்பதோடு, இந்த வரையரையை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
ஆளும் அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கைகளினால் தமிழகத்தில் தொழில்துறை நிறுவனங்கள் லாபகரமாக தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் வேலை இழக்கும் சூழலும் நிலவுகிறது. இந்நிலையை ஏற்படுத்திய மத்திய, மாநில அரசுகளை இக்கூட்டம் வண்மையாக கண்டிக்கிறது.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.