குதிரை சவாரி வீராங்கனையாக நடிக்கும் டாப்ஸி
கேம் ஓவர் படத்துக்கு வரவேற்பு கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் டாப்சி. தற்போது 3 இந்தி படங்களில் நடிக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:- “நாம் வாழும் பூமியை ஆண்கள் உலகமாகவே பார்க்கின்றனர். சில வேலைகளை ஆண்களால் மட்டுமே செய்ய முடியும். பெண்களால் செய்ய முடியாது என்ற நிலைமைகள் ஒரு காலத்தில் இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது அப்படி இல்லை. கல்பனா சாவ்லா விண்வெளியில் அடி எடுத்து வைப்பதுவரை அந்த துறை ஆண்கள் உலகம் என்றே இருந்தது.
குதிரை சவாரி என்பதும் ரூபா சிங் வருவதற்கு முன்பு வரை ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலைமையில்தான் இருந்தது. பெண்கள் நினைத்தால் எந்த நிலைக்கும் செல்ல முடியும் என்பதை இவைகள் நிரூபித்து உள்ளன. குதிரை சவாரி வீராங்கனை ரூபாசிங் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாராகிறது. அதில் நான் நடிக்கிறேன். ரூபா சிங் கதாபாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று என்னை அணுகி டைரக்டர் கதை சொன்னார்.
நான் கவர்ச்சியான கதாபாத்திரங்கள் செய்துவிட்டு இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறேன். தோல்விகள் வந்தபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. சபானா, பட்லா, கேம் ஓவர் என்று பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நான் நடித்துள்ளதால் ரூபா சிங் வாழ்க்கை படமும் தேடி வந்துள்ளது. இந்த படத்துக்கு 100 சதவீத உழைப்பை கொடுப்பேன்.” இவ்வாறு டாப்சி கூறினார்.