பஞ்சாப் முதல் மந்திரியின் மனைவியிடம் நடந்த பண மோசடி!
பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியின் மனைவி பிரனீத் கவுர், பாட்டியாலா தொகுதி எம்.பி. ஆவார். பிரனீத் கவுர், பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்தார்.
அப்போது, வங்கி மேலாளர் என்று கூறி, ஒருவர் அவரை செல்போனில் தொடர்பு கொண்டார். கவுரின் சம்பளத்தை செலுத்துவதற்காக, வங்கிக்கணக்கு மற்றும் ஏ.டி.எம். கார்டு விவரங்களை சொல்லுமாறு கேட்டார். பிரனீத் கவுரும் அதை நம்பி எல்லா தகவல்களையும் அளித்தார்.
சற்று நேரத்தில் அவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.23 லட்சம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த கவுர், இதுகுறித்து பஞ்சாப் போலீசில் புகார் செய்தார். செல்போன் அழைப்பை ஆய்வு செய்த போலீசார், மோசடி நபர் ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருப்பதை கண்டுபிடித்தனர். அங்கு சென்று அவனை கைது செய்தனர்.