Tamilவிளையாட்டு

டிஎன்பிஎல் கிரிக்கெட் – தூத்துக்குடி அணியை வீழ்த்தி திருச்சி வெற்றி

தமிழ்நாடு பிரிமீயர் கிரிக்கெட் தொடரின் 24-வது லீக் போட்டி திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் – திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து, திருச்சி அணியின் தொடக்கவீரர்களாக முகுந்த் மற்றும் முரளி விஜய் ஆகியோர் களமிறங்கினர். முகுந்த் 6 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த ஆதித்யா (0) ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கணேஷ், முரளி விஜயுடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

அதிரடியாக விளையாடிய முரளி விஜய் 57 பந்துகளில் 4 சிக்சர்கள் உள்பட 101 ரன்கள் விளாசினார். கணேஷ் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் திருச்சி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது.

தூத்துக்குடி தரப்பில் அந்த அணியின் அதிசயராஜ் டேவிட்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் தொடக்கவீரர்களாக கேப்டன் சிவா மற்றும் ஸ்ரீனிவாசன் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். சிவா 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சற்று நிலைத்து நின்று ஆடிய ஸ்ரீனிவாசன் அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் திருச்சி அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இதனால் தூத்துக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.

திருச்சி தரப்பில் அந்த அணியின் சந்திரசேகர் மற்றும் பொய்யாமொழி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *