அதிமுக அரசின் செயல்பாடுகள் முரண்பாடாக உள்ளன – டிடிவி தினகரன்
மதுரையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு தலைமையின் கீழ் இயங்கும் தேசிய புலனாய்வு முகமை நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அரசு தூண்டுதலில் செயல்படக்கூடாது.
தமிழக அரசு சிறுபான்மையினருக்கு ஆதரவாக உள்ளதா? என்பதை தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு நிதியை திருப்பி அனுப்புவதன் மூலம் தமிழக அரசின் மோசமான செயல்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
முத்தலாக் மசோதாவில் தமிழக அரசின் நிலைப்பாட்டை இஸ்லாமியர்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள். அ.தி.மு.க. அரசின் செயல்கள் முரண்பாடாக உள்ளன. அதன் தலைமையும் முரண்பாடாகத்தான் உள்ளது.
மதுரைக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முல்லை பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. ஆனால் வைகை குடிநீர் திருட்டில் ஓ.பி.எஸ். குடும்பத்துக்கு தொடர்பு உள்ளது. இந்த கூற்றை மறுப்பதற்கு இல்லை.
பெரியாறு நீர்ப்பாசன விவசாயிகள் தண்ணீர் பெறுவதில் ஓ.பி.எஸ். குடும்பம் தடையாக இருக்கக்கூடாது.
வேலூர் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.