நாட்டை பாதுகாத்தவர்களுக்கு தலை வணங்குவோம் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் படையினர், எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சுமார் 200 கி.மீ. வரை ஆக்கிரமித்தனர். இந்திய நிலைகளையும் கைப்பற்றியது. இதையடுத்து இந்திய ராணுவம் மிகப்பெரும் தாக்குதலை நடத்தி பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டியடித்தது.
இந்தப் போரின்போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கார்கில் வெற்றி தினத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு வீரவணக்கமும் செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரின் டிராஸ் பகுதியில் உள்ள போர் நினைவிட சின்னத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று செல்ல உள்ளார்.
இந்நிலையில், கார்கில் போர் வெற்றி தினம் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், நாட்டைப் பாதுகாத்தவர்களுக்கு தலைவணங்குவோம். 1999ல் கார்கில் போரில் ஆயுதப்படைகள் தீரமுடன் போரிட்டன. இந்தியாவை பாதுகாத்தவர்களின் வீரத்துக்கும், துணிச்சலுக்கும் தலைவணங்குவோம் என தெரிவித்துள்ளார்.