கடாரம் கொண்டான்- திரைப்பட விமர்சனம்
கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் செல்வா இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கடாரம் கொண்டான்’ எப்படி என்பதை பார்ப்போம்.
மலேசியாவின் ட்வின் டவரில் இருந்து கண்ணாடியை உடைத்துக் கொண்டு, அதிரடி எண்ட்ரி கொடுக்கும் விக்ரமை இரண்டு பேர் விரட்டுகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடும் போது விபத்தில் சிக்கி, மயக்கம் அடையும் விக்ரமை போலீஸ் மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்பதோடு, அவர் கை ரேகையை வைத்து அவர் யார்? என்பதை அறிய முயற்சிக்கிறது. விக்ரம் ஒரு கொள்ளைகாரன், மாபியா கூட்டத்தை சேர்ந்தவர், சிறையில் தண்டனை அனுபவித்தவர் என்பதோடு அவரும் ஒரு காவல் துறையை சேர்ந்த கமெண்டோ வீரர் என்பது தெரிய வருகிறது.
இதற்கிடையே, விக்ரமை போலீஸ் பிடியில் இருந்து காப்பாற்ற நினைக்கும் அவரது தம்பி, அபியின் மனைவி அக்ஷரா ஹாசனை கடத்தி பிணைய கைதியாக வைத்துக் கொண்டு, விக்ரமை மருத்துவமனையில் இருந்து வெளியே அழைத்து வர வேண்டும் என்று மிரட்டுகிறார். அபியும் விக்ரமை மருத்துவமனையை விட்டு வெளியே அழைத்து வர, ஆரம்பத்தில் விக்ரமை துரத்தியவர்கள் தொடர்ந்து அவரை துரத்துகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்க நினைக்கும் போது விக்ரமையும், அபியையும் போலீஸ் டீம் ஒன்று பிடிக்கிறது. மற்றொரு போலீஸ் டீமை சேர்ந்த அதிகாரி அந்த இடத்திற்கு வரும் போது, அவரை போலீஸே கொலை செய்வதோடு, அக்ஷரா ஹாசனையும் அவர்கள் கடத்திவிடுகிறார்கள். தன்னை சுற்றி என்ன நடக்கிறது, என்பதை அறியாத விக்ரம், தனது அதிரடியான நடவடிக்கை மூலம், தன்னை கொலை செய்வதற்காக நடக்கும் மிகப்பெரிய சதி குறித்து தெரிந்து கொள்கிறார். அதனை முறியடித்து, அக்ஷாரா ஹாசனை காப்பாற்ற களம் இறங்குபவர், அதை எப்படி செய்கிறார், அவரை ஏன் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள், என்பது தான் மீதிக்கதை.
தமிழகத்தில் கோட் சூட் போட்ட போலீஸ், என்ற கான்சப்ட்டில் ’தூங்காவனம்’ படத்தை இயக்கிய இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா, அதன் இரண்டாம் பாகமாகவே இந்த படத்தையும் இயக்கியிருக்கிறார். ஆனால், கதை முழுவதுமாக மலேசியாவில் நடப்பது போல காண்பித்திருக்கிறார்.
தூங்காவனம் படத்தில் எப்படி சில போலீஸ் அதிகாரிகள் கிரிமினல் வேலையில் ஈடுபடுவார்களோ, அதேபோல் தான் இந்த படத்தின் மையக்கருவும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த படத்தில் இருந்த குறைந்தபட்ச டீடய்ல் கூட இந்த படத்தில் இல்லை. குறிப்பாக விக்ரமின் கதாபாத்திர பெயரான ‘கடாரம் கொண்டான்’ படத்தின் எந்த இடத்திலும் பதிவு செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அந்த பெயரின் சுருக்கமான ’கே.கே’ என்பதை மட்டுமே இயக்குநர் பதிவு செய்திருக்கிறார்.
விக்ரமுக்கு இப்படம் முக்கியமான படம் என்று சொல்ல முடியாது. அவர் ஓய்வு எடுக்கும் நாட்களில் கூட வேலை செய்த ஒரு படம் என்பது போல தான் இருக்கிறது. குறிப்பாக விக்ரம் கெளரவ வேடத்தில் நடித்தது போல தான் இருக்கிறது. அவர் தான் படத்தின் ஹீரோ, அவரை சுற்றி தான் கதை நடக்கிறது, என்றாலும், அவரது கதாபாத்திரத்தின் பதிவு என்பது மிகக்குறைவாக இருக்கிறது. ஆனால், ஒரு நடிகராக தனது கதாபாத்திரத்தை கையாண்ட விதத்திற்காக விக்ரமுக்கு பொக்கே கொடுத்து பாராட்டாலாம்.
குறிப்பாக, அதிகம் வசனம் பேசாமல் கண்களிலேயே நடித்திருக்கும் விக்ரம், தனது தம்பியின் மரணத்தை கூட சாதாரணமாக எடுத்துக்கொள்பவர், தன்னை சுற்றி என்ன நடக்கிறது, என்று தெரியாமல் குழப்பமடையும் இடத்தில் கூட தெளிவான ரியாக்ஷனை கொடுத்து அசத்தியிருக்கிறார். பொதுவாக மாஸ் ஹீரோக்களின் வசனங்களுக்கும், எண்ட்ரிக்கும் தான் ரசிகர்கள் கை தட்டுவார்கள். ஆனால், இந்த படத்தில் விக்ரமின் லுக்கிற்கும், அதில் அவர் கொடுக்கும் எக்ஸ்பிரன்ஸ்களுக்குமே ரசிகர்களின் கைதட்டல் திரையரங்கையே அதிர வைக்கிறது.
இளம் ஜோடிகளாக நடித்திருக்கும் அபி மற்றும் அக்ஷரா ஹாசன், கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வாக இருக்கிறார்கள். ஆனால், அக்ஷரா ஹாசன் தான் பார்ப்பதற்கு ரொம்ப சின்ன பெண்ணாக இருக்கிறார். ஆனால், அவரது குரல் மட்டும் ரொம்ப வயதான பெண்மணிக்கு உரியது போல இருக்கிறது. அதே போல், கர்ப்பிணி பெண்ணுக்கு உண்டான வேடத்திலும் அவர் சரியாக பொருந்தவில்லை.
போலீஸ் அதிகாரிகளாக வருபவர்கள் அனைவரும் தமிழ் சினிமாவுக்கு புதியவர்களாக இருந்தாலும், கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, அவர்களது நடிப்பும் இயல்பாக இருக்கிறது.
ஜிப்ரானின் இசையில் ஒரே ஒரு பாடல் என்றாலும், திரும்ப திரும்ப கேட்க வைக்கும் பாடலாக இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா, ஆக்ஷன் காட்சிகளை அமர்க்களமாக படம்பிடித்திருப்பதோடு, மலேசியாவின் ட்வின் டவரை, இதுவரை தமிழ் சினிமாவில் பயன்படுத்தாத விதத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் கச்சிதமாக கத்திரி போட்டிருக்கிறார். விக்ரம் யார்? என்பதை கூட, படத்தை உண்ணிப்பாக கவனித்தால் தான் அறிந்துக்கொள்ள முடியும், என்ற அளவுக்கு காட்சிகளை ரொம்ப ஷார்ப்பாக கட் செய்திருக்கிறார்.
ஆங்கிலப் படத்தின் தாக்கத்தினால் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா, கமல்ஹாசனுடன் சேர்ந்து உலகப் படங்களை அதிகமாக பார்த்துவிட்டார் போல, அதனால தான் தமிழ் சினிமாவின் கலாச்சாரத்திற்கும், தமிழ் ரசிகர்களுக்கும் தொலைவாக இருக்கும் திரைக்கதையுடன் இந்த முறையும் களம் இறங்கியிருக்கிறார்.
படத்தில் அதிகம் பாராட்டக்கூடியது ஆக்ஷன் காட்சிகளும், திரைக்கதையின் வேகமும் தான். அதிலும் விக்ரம் கதாபாத்திரமும், அந்த கதாபாத்திரத்தின் பின்னணியும் படு வேகமாக இருக்கிறது. விக்ரம் யார்? என்பதை இன்னும் சற்று அழுத்தமாக சொல்லியிருந்தால், படம் ரசிகர்கள் மனதிற்கு நெருக்கமாக இருந்திருக்கும். அபி மற்றும் அக்ஷரா ஹாசன் கதாபாத்திரங்களில் இருந்த சிறு டீட்டய்ல் கூட விக்ரம் கதாபாத்திரத்தில் இல்லை. குறிப்பாக அவரது தம்பி கதாபாத்திரம், விக்ரம் போலீஸா அல்லது மாபியா கும்பலை சேர்ந்தவரா, என்பதை கூட தெளிவாக சொல்லாமல், மிக மிக சுறுக்கமாக இயக்குநர் சொல்லியிருப்பது, விக்ரம் ரசிகர்களை நிச்சயம் எரிச்சலடைய செய்யும்.
இருந்தாலும், ஆக்ஷன் த்ரில்லர் படத்திற்கு தேவையான வேகத்திற்கும், விறுவிறுப்புக்கும் படத்தில் பஞ்சமில்லை.
மொத்தத்தில், இந்த ‘கடாரம் கொண்டான்’ விக்ரம் ரசிகர்கள் கொண்டாட வேண்டிய படமாக இல்லை என்றாலும், அவர்களை திருப்திப்படுத்தும் சுமாரான படமாக உள்ளது.
-ஜெ.சுகுமார்