கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் – காலியிறுதிக்கு முன்னேற்றிய பிரேசில்
12 அணிகள் இடையிலான 46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை சாவ் பாலோ நகரில் நடந்த ஒரு ஆட்டத்தில் 8 முறை சாம்பியனான பிரேசில் அணி, பெருவை (ஏ பிரிவு) எதிர்கொண்டது.
உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் களம் புகுந்த பிரேசில் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. பந்து பெரும்பாலான நேரம் பிரேசில் பக்கமே (69 சதவீதம்) வலம் வந்தது. 14-வது நிமிடத்தில் கார்னர் பகுதியில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை பிரேசில் வீரர் கேஸ்மிரோ தலையால் முட்டி கோலாக்கினார்.
பிரேசிலுக்கு 2-வது கோல் பெரு கோல் கீப்பர் பெட்ரோ காலிஸ் செய்த தவறால் கிடைத்தது. அதாவது 18-வது நிமிடத்தில் தனது கோல் பகுதியில் இருந்து அவர் பந்தை சரியாக தூக்கியடிக்காததால் அருகில் நின்ற பிரேசில் வீரர் ராபர்ட்டோ பிர்மினோ மீது பட்டு கோல் நோக்கி ஓடியது. கம்பத்தில் பட்டு திரும்பிய பந்தை கீப்பர் பெட்ரோ காலிசை ஏமாற்றி பிர்மினோ கோலாக மாற்றினார்.
தொடர்ந்து எவர்டான் (31-வது நிமிடம்), டேனி ஆல்வ்ஸ் (53-வது நிமிடம்), வில்லியன் (90-வது நிமிடம்) ஆகிய பிரேசில் வீரர்களும் கோல் போட்டு பெருவை மிரள வைத்தனர். பிரேசிலின் கோல் எண்ணிக்கை மேலும் ஒன்று அதிகரித்து இருக்க வேண்டியது. கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கேப்ரியல் ஜீசஸ் கோட்டை விட்டார். முடிவில் பிரேசில் 5-0 என்ற கோல் கணக்கில் பெரு அணியை சாய்த்தது.
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் வெனிசுலா அணி 3-1 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை தோற்கடித்தது. ‘ஏ’ பிரிவில் லீக் சுற்று நிறைவடைந்த நிலையில் முதல் இரு இடங்களை பிடித்த பிரேசில் (2 வெற்றி, ஒரு டிரா), வெனிசுலா (ஒரு வெற்றி, 2 டிரா) ஆகிய அணிகள் கால்இறுதிக்கு முன்னேறின. மற்ற ஆட்டங்களின் முடிவை பொறுத்து பெரு அணிக்கு (ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிராவுடன் 4 புள்ளி) அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரிய வரும். மூன்று லீக்கிலும் தோற்ற பொலிவியா அணி நடையை கட்டியது.