பெண்கள் உலக ஆக்கி – இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா
பெண்கள் உலக ஆக்கி தொடரின் இறுதிசுற்று போட்டி ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதியில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணியில் குர்ஜித் கவுர் (22 மற்றும் 37-வது நிமிடம்), நவ்னீத் கவுர் (31-வது நிமிடம்), கேப்டன் ராணி ராம்பால் (57-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். மற்றொரு அரைஇறுதியில் ஜப்பான் அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 3-1 என்ற கோல் கணக்கில் ரஷியாவை தோற்கடித்தது. இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் தகுதி போட்டிக்கான இறுதிசுற்றுக்கு தகுதி பெறும். அந்த வகையில் இந்தியாவும், ஜப்பானும் அந்த தகுதியை எட்டியிருக்கிறது.
வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் ராணி ராம்பால் கூறுகையில், ‘எங்களது அணியின் சக வீராங்கனை லாரெம்சியாமியின் தந்தை நேற்று முன்தினம் இறந்து விட்டார். இந்த வெற்றியை அவரது தந்தைக்கு சமர்ப்பிக்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். லாரெம்சியாமி இன்னும் தாயகம் திரும்பவில்லை. எங்களுடன் தான் இருக்கிறார். அவரை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்’ என்றார்.