பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் உண்மையல்ல – மத்திய அரசு விளக்கம்
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய விமானப்படை, பாகிஸ்தானில் உள்ள பாலக்கோட் எனும் பயங்கரவாத முகாம் உள்ள இடத்தில் தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் எல்லைப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தானின் பிரபல பத்திரிக்கை ஒன்று, ‘இந்திய பிரதமர் மோடியும், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளனர்’ என செய்தி வெளியிட்டது.
இதற்கு இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து ராவேஷ் கூறுகையில், ‘பாகிஸ்தான் ஊடகத்தில் வெளியான செய்திகளில் உண்மை இல்லை.
பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாழ்த்துக்கு பிரதமர் மோடி, மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்தனர். இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை குறித்த எந்த கருத்தையும் பிரதமர் மோடி தெரிவிக்கவில்லை என்பதுதான் உண்மை’ என கூறினார்.