Tamilசெய்திகள்

ஒற்றலைத் தலைமை விவகாரம்! – அதிமுக கூட்டத்தில் விவாதிக்கவில்லை

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமை தற்போது உள்ளது. இதனை மாற்றிவிட்டு ஒற்றைத் தலைமையில் கட்சி இயங்க வேண்டும் என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சமீபத்தில் கருத்து தெரிவித்தார். அவரது கருத்துக்கு கட்சியில் சில நிர்வாகிகள் ஆதரவும் தெரிவித்தனர். இந்த விவகாரம் தற்போது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியானது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று காலை கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் கட்சியின் ஒற்றைத் தலைமை கோரிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என தகவல் வெளியானது.

இந்நிலையில் கூட்டம் முடிவடைந்தபின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஒற்றை தலைமை தொடர்பாக இன்றைய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசவில்லை என்று கூறினார். தற்போது உள்ளபடி செயல்பட ராஜன் செல்லப்பா ஒப்புக்கொண்டதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், “இது தேர்தலுக்கு பின்னால் நடக்கும் வழக்கமான கூட்டம்தான். உள்ளாட்சி தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். ஒற்றை தலைமை குறித்த கோரிக்கை இனி அதிமுகவில் எழாது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *