உலகக்கோப்பை கிரிக்கெட் – இந்திய அணியின் சீருடையின் வண்ணம் மாறுகிறதா?
1992ம் ஆண்டு முதல், உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு நாட்டின் அணி வீரர்களும் வண்ண சீருடைகள் அணியும் முறை அறிமுகப்படுத்தப்பட்டன.
அன்று முதல் தற்போது வரை நீலநிற சீருடை அணிந்தே இந்திய அணி களம் காண்கிறது. இதனால் இந்திய அணியை ‘Men In Blue’ எனச் செல்லமாக அழைப்பதும் உண்டு.
உலக கோப்பை தொடரில் இதுவரை இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நீலநிற சீருடையில் விளையாடி வருகின்றனர். நீலநிறம் என்றாலும் அதில் வித்தியாசம் இருக்கும்.
இந்நிலையில் நடப்பு உலக கோப்பை தொடரில் ஐசிசி புதிய விதியை கொண்டு வந்துள்ளது. அதன்படி, ஒரு போட்டியில் ஒரே நிற ஆடைகளை அணிந்து விளையாடக்கூடாது என்றும், அப்படி விளையாடுவதால் விரர்களின் அணிகளை சரியாக கணக்கிட முடியாது என்பதாலும் சீருடை மாற்றப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதியின்படி இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகளில் இங்கிலாந்து அணி மட்டும் தன்னுடைய சொந்த சீருடையில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற அணிகள் தங்களுக்கான சீருடையின் நிறங்களை, அவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம் எனவும் ஐசிசி கூறியுள்ளது.
அந்த வகையில் ஜூன் 30ம் தேதி இங்கிலாந்துடன் நடைபெறும் போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஆரஞ்சு நிற சீருடையுடன் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் பாகிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பச்சை நிற சீருடையில் விளையாடி வருகின்றன.
இதில் பாகிஸ்தான் மட்டும் சொந்த சீருடையில் விளையாடலாம் எனவும், மற்ற இரு அணிகளும் பாகிஸ்தானுடன் விளையாடும்போது மாற்று நிற சீருடையில் விளையாட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.