Tamilசெய்திகள்

புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க வேண்டும் – வெங்கயா நாயுடு

புதிய கல்வி கொள்கைக்கான கஸ்தூரிரங்கன் குழுவின் வரைவு அறிக்கை, மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மாநிலங்கள், ஆங்கிலம் மற்றும் தாய்மொழியுடன் மூன்றாவது மொழியாக இந்தியை கற்றுக்கொள்கிற வகையில் மும்மொழி கொள்கையை நடைமுறைப்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் 6-ம் வகுப்பு முதல் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழி பாடத்தையும் கற்பிக்க வேண்டும் என்ற நிலை உருவாகும். இது இங்கு எதிர்ப்புகளுக்கு வழிவகுத்து உள்ளது.

இந்த தருணத்தில், டெல்லியில், கல்வி தரத்தை உயர்த்துவதற்கான தொழில்துறை அகாடமி கலந்துரையாடல் என்ற பெயரிலான 2 நாள் மாநாட்டை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் பேசும்போது, ‘‘புதிய கல்விக்கொள்கையைப் பொறுத்தமட்டில், வரைவு அறிக்கையை அனைவரும் வாசித்து, பகுப்பாய்வு செய்து, விவாதிக்க வேண்டும். அதை விட்டு விட்டு அவசரமான முடிவுகளுக்கு வந்து விடக்கூடாது’’ என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசும்போது அவர் கூறியதாவது:-

பள்ளிப்பையின் சுமையை குறைத்தல், விளையாட்டை ஊக்குவித்தல், அறநெறிகள், விஞ்ஞானம், வரலாறு ஆகியவற்றை கற்பித்தல், சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பு ஆகியவை பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக்கப்பட வேண்டும்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும், கண்டுபிடிப்புகளுக்கான சூழல்களை உருவாக்குவதற்கும் கல்வி மற்றும் தொழில்துறை இடையே ஒரு இனிய உறவை ஏற்படுத்த வேண்டும்.

இதை அடைவதற்கு தொழில் துறை இன்னும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்களுடன் ஒரு ஆக்கப்பூர்வமான உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நோக்கங்களுக்காக கரம் கோர்ப்பதை விட தொழில் துறையும், கல்வி நிறுவனங்களும் நீண்ட காலத்துக்கு கூட்டாக செயல்பட வேண்டும்.

நமது பல்கலைக்கழகங்களிலும், பிற கல்வி நிறுவனங்களிலும் ஆராய்ச்சி கலாசாரத்தை பெரிய அளவில் ஊக்குவிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

காப்பரேட் நிறுவனங்களைப் பொறுத்தமட்டில், அவை குறிப்பிட்ட துறைகளை அடையாளம் கண்டு, அவற்றில் அவர்களுடன் தொடர்புடைய வகையில் டாக்டர் மற்றும் டாக்டர் பட்டத்துக்கு பிந்தைய ஆராய்ச்சிக்கு நிதி வழங்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிநடத்தும் ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதி வழங்க வேண்டும். இதனால் சமூகம் பலன்பெறும். இந்த நாட்டின் பொருளாதாரமும் பயன் அடையும்.

நமது உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து படித்து வெளியே வருகிற பல மாணவர்கள், வேலை வாய்ப்புக்கான திறமையில்லாதவர்களாக இருக்கின்றனர். இளம்பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்துகிற நிறுவனங்கள், அவர்கள் பணியில் இருந்து கொண்டே 6 மாதங்களுக்கோ அல்லது ஒரு ஆண்டுக்கோ பயிற்சி அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

தொழில்துறை, விவசாய துறை ஆகியவற்றின் தேவைகளை சந்திக்கிற வகையிலும், இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலும் தொழில் முனைவோராக திகழ்கிற வகையில் முழு திறமை படைத்தவர்களாக பட்ட மாணவர்களை ஆக்குகிற வகையில் நமது கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும்.

உலகளாவிய 100 பல்கலைக்கழகங்களில் நமது இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடம் இல்லை. பல்கலைக்கழகங்களும், கல்வியாளர்களும் தங்களை சுய பரிசோதனை செய்து, கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *