வாராணாசியில் என்னை எதிர்த்து போட்டியிட்டவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் – பிரதமர் மோடி
பாராளுமன்ற தேர்தலில் 303 இடங்களை பிடித்த பாஜக மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 30-ம் தேதி மாலை 7 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை பதவியேற்கிறது.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினராக தன்னை இரண்டாம் முறை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வாரணாசி தொகுதிக்கு வந்த பிரதமர் மோடி இங்கு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
வெற்றி-தோல்வி கணக்குகளை தவிர தேர்தல்களில் தலைவர்கள் மற்றும் வாக்காளர்களிடையே இருக்கும் வேதியல் தொடர்புகளையும் இனி அரசியல் ஆய்வாளர்கள் கவனிக்கும் நிலைமையை இந்த தேர்தல் ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் அரசுக்கு ஆளும்கட்சிக்கும் இடையில் உள்ள வேதியல் தொடர்புகள் பணிகளுக்கும் பணியாளர்களுக்கும் உள்ள ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தும்.
வாரணாசி தொகுதியில் இந்தமுறை நான் வேட்புமனு தாக்கல் செய்ததும் உங்களால் இன்னும் ஒரு மாதத்துக்கு இங்கு வர இயலாது. நீங்கள் நாடு முழுவதும் பிரசாரத்துக்கு செல்லுங்கள். உங்கள் தொகுதியை நாங்கள் கவனித்து கொள்கிறோம் என்று எனக்கு நீங்கள் உத்தரவிட்டீர்கள். அதேபோல் சென்ற முறையைவிட இந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற வைத்திருக்கிறீர்கள்.
தேர்தல் பிரசாரம் எல்லாம் நிறைவடைந்த பின்னர்கூட இங்கு வரலாமா? என்று நான் சிந்தித்ததுண்டு, ஆனால், நீங்கள் எனக்கிட்ட உத்தரவை நினைவுகூர்ந்து நான் வரவில்லை. தனது தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும்போதும் வாக்கு எண்ணப்படும்போதும் என்னைப்போல் ஆசுவாசமாக இருந்த வேட்பாளர் யாருமே இருக்க முடியாது.
இதற்கெல்லாம் காரணம் உங்களுடைய உழைப்பு. உங்களை நம்பி, உங்களது உழைப்பின்மேல் இருந்த நம்பிக்கையால்தான் நான் கேதர்நாத்துக்கு சென்று விட்டேன்.
இந்த நாடு என்னை பிரதமராக தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால், என்றென்றும் நான் உங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும் சேவகனாகவும் இருப்பேன். உங்கள் பணியே எனக்கு முதன்மையானது. என்னை எதிர்த்து இந்த வாரணாசி தொகுதியில் போட்டியிட்டவர்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
பாஜக, இந்திமொழி பேசும் மாநில மக்களுக்கான கட்சி என்று சில அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் அதிகமான இடங்களை பிடித்துள்ள எங்களை இன்னுமா இந்திமொழி பேசும் மாநில மக்களுக்கான கட்சி என்று கூறுகிறீர்கள்?
கோவாவில் நான்காண்டுகளாக எங்கள் ஆட்சி நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள், அசாம், லடாக் எல்லா இடங்களிலும் எங்கள் ஆட்சி உண்டு. அதிகமாக வெற்றிபெற்றும் வந்திருக்கிறோம். இன்னுமா இந்திமொழி பேசும் மாநில மக்களுக்கான கட்சி என்று கூறுகிறீர்கள்?
பாஜகவின் சித்தாந்தங்களை கடைப்பிடுக்கும் ஒரே காரணத்துக்காக மேற்கு வங்காளத்தில் அரசியல் விரோதத்தால் பாஜகவினர் கொல்லப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.