Tamilசெய்திகள்

தமிழகத்தில் பா.ஜ.க தோற்றது ஏன்? – தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி பெரியநாயகபுரத்தில் உள்ள தனது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சில ஆண்டுகளாக நல்ல திட்டங்களையும் தவறான திட்டங்களாக முன்னிறுத்தி அது மிக அதிகளவில் பிரசாரங்களாக முன்னெடுத்து செல்லப்பட்டு, இன்று தமிழக மக்கள் அதற்கு செவிசாய்த்து வாக்குகளை கொடுத்து இருக்கிறார்கள். தூத்துக்குடியில் இந்த பகுதி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தான் வேட்பாளராக இங்கு வந்தேன். இந்த பகுதி மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று குறித்து வைத்திருந்தேன்.

எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்களும் பயன்பெறும் வகையில் தூத்துக்குடியில் எனது மக்கள் பணி தொடரும். கூட்டணி கட்சியினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த கால அரசியலை கொண்டு பார்க்கும்போது, மக்கள் தேர்ந்தெடுத்தவர் ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர் என்பதை மறந்து விடக் கூடாது. எது எப்படி இருந்தாலும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை வாழ்த்துகிறேன். மக்கள் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். தமிழகம், கேரளாவில் தோல்விக்கான காரணம் தொடர் எதிர் பிரசாரம்தான். பிரதமர் மோடிக்கு பாரத தேசம் முழுவதும் வரவேற்பு இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பை காண்பிக்க வேண்டும் என்று எதிர்ப்பை காண்பித்தனர். நல்ல திட்டங்களை மற்ற மாநில மக்கள் ஏற்றுக்கொண்டனர். அதே நல்ல திட்டங்கள் தமிழகத்தில் தவறான திட்டங்களாக முன்னெடுத்து செல்லப்பட்டது.

நாங்கள் தமிழகத்தில் வெற்றி பெறவில்லை என்று ஆதங்கம் இல்லை. ஆனால் உரிமையுடன் தமிழகத்தில் பல திட்டங்களை கொண்டு வரலாம் என நினைத்து இருந்து தற்போது அது முடியாமல் போனது தான் எங்களுக்கு கவலை. அதே நேரத்தில் இடைத்தேர்தலில் எங்களின் கூட்டணி கட்சி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்.

தற்போது மு.க.ஸ்டாலின் பெற்றிருப்பது மிகப்பெரிய வெற்றி இல்லை. தமிழகத்தில் பா.ஜனதா-அ.தி.மு.க. வெற்றி பெற்றிருந்தால் தமிழகம் இன்னும் அதிகம் பலனடைந்து இருக்கும். மு.க.ஸ்டாலின் வெற்றி தமிழகத்திற்கு எந்தவிதத்திலும் பலன் இல்லாத வெற்றி. வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். வரும் காலத்தில் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தொடர முடியுமா என்ற சூழ்நிலை உருவாகும். பின்னால் அது மு.க.ஸ்டாலினுக்கு தலைவலியாக மாறும். மு.க.ஸ்டாலினால் வெளிநடப்பை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.

தமிழக மக்கள் நிச்சயம் வருந்துவார்கள். தமிழக மக்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொள்ளும் காலம் மிக விரைவில் வரும். அதற்காக நாங்கள் இன்னும் கடுமையாக உழைப்போம். நாங்கள் தமிழக மக்களால் புறக்கணிக்கப்படவில்லை. இன்னும் அதிக கவனம் பெற வேண்டும் என்ற எச்சரிக்கையை பெற்றுள்ளோம். கர்நாடகா, மத்தியபிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *