மம்தா பேனர்ஜியின் புகைப்படத்தை மாப்பிங் செய்த விவகாரம் – கைது செய்யப்பட்ட பெண் ஜாமினில் விடுதலை
மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை மிகவும் விகாரமாக சித்தரித்து சில நாட்களாக பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது.
இந்த புகைப்படத்தை பகிர்ந்ததாக பாஜக இளைஞரணியான யுவ மோர்ச்சாவை சேர்ந்த ஹவுரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா சர்மா என்ற பெண்ணை தாஸ்நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 14 நாள் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, பிரியங்கா சர்மாவை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் அவரது வழக்கறிஞர் என்.கே.கவுல் தாக்கல் செய்தார்.
இந்த மனு விடுமுறைக்கால நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கண்ணா ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பாஜக பெண் நிர்வாகி பிரியங்கா சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்ததுடன், எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.