மூன்று பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை விதித்தது இலங்கை அரசு
இலங்கை தலைநகர் கொழும்புவில் 21-4-2019 அன்று தற்கொலைப்படையை சேர்ந்த ஒரு பெண் உள்பட 9 பயங்கரவாதிகள் தேவாலயங்கள் மற்றும் சொகுசு ஓட்டல்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 10 இந்தியர்கள் உள்பட 258 பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர்.
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தூண்டுதலால் நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல்களுக்கு இலங்கையில் இயங்கி வரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு பொறுப்பேற்றது. ஈஸ்டர் தாக்குதல் என்று அழைக்கப்படும் இந்த தாக்குதல் தொடர்பாக சுமார் ஆயிரம் பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இயல்புநிலைக்கு திரும்பிவரும் இலங்கையின் வடமேற்கு பகுதியில் இருபிரிவினருக்கு இடையில் வெடித்த மோதலை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு விரும்பத்தகாத பதிவை மையமாக வைத்து கடலோர நகரமான சிலாபம் நகரில் நேற்று முன்தினம் இருதரப்பினருக்கு இடையில் வெடித்த கலவரம் பிற பகுதிகளுக்கும் பரவியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமான தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தே மில்லத்தே இப்ராஹிம், வில்லாயத் அஸ் செய்லானி ஆகிய அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா கையொப்பமிட்டுள்ளார்.