Tamilவிளையாட்டு

ஐபிஎல் இறுதிப் போட்டி – சென்னையை வீழ்த்தி மும்பை வெற்றி

ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜயந்த் யாதவ் நீக்கப்பட்டு மெக்ளெனகன் சேர்க்கப்பட்டார். சென்னை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணியின் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில் இரண்டு ரன் கொடுத்தார். அடுத்த ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் ரோகித் சர்மா ஒரு சிக்ஸ் விளாசினார். தீபக் சாஹர் வீசிய 3-வது ஓவரில் டி காக் மூன்று சிக்ஸ் விளாசினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் 3 ஓவரில் 30 ரன்னைத் தொட்டது.

டி காக் விஸ்வரூபம் எடுப்பார் என்று நினைக்கையில், சர்துல் தாகூர் வீசிய ஐந்தாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 17 பந்தில் 4 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். அடுத்த ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹிட்மேன் ரோகித் சர்மா எம்எஸ் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் 5.2 ஓவரில் 45 ரன்களாக இருந்தது.

3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். தொடக்க ஜோடி ஆட்டமிழந்ததும், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் அப்படியே படுத்துவிட்டது. அந்த அணி 7 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சூர்யகுமார் யாதவ் 15 ரன்னிலும், இஷான் கிஷன் 23 ரன்னிலும், குருணால் பாண்டியா 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மும்பை 14.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் – இஷான் கிஷன் ஜோடி 36 பந்தில் 37 ரன்களே எடுத்தது.

6-வது விக்கெட்டுக்கு பொல்லார்டு உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். அப்போது 14.4 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்தது.

பொல்லார்டு அவ்வப்போது சிக்ஸ் தூக்கி மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. 18-வது ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்ஸ் தூக்கினர். 19-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். முதல் பந்தை ஹர்திக் பாண்டியா சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 18.2 ஓவரில் 140 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது பந்தில் சாஹர் ஆட்டமிழந்தார். கடைசி 4 பந்திலும் சாஹர் ரன் விட்டுக்கொடுக்கவில்லை.

கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ரன்கள் விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. பொல்லார்டு 25 பந்தில் தலா மூன்று பவுண்டரி, 3 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்

151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணி களமிறங்கியது. வாட்சன், டு பிளிசிஸ் ஜோடி அதிரடியாக விளையாடினர். டு பிளிசிஸ் 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் குர்ணால் பாண்டியா ஓவரில் ஸ்டேம்பிங் என்ற முறையில் வெளியேறினார். அடுத்த வந்த ரெய்னா 14 பந்துகளில் 8 ரன்களும் ராயுடு 1 ரன்களிலும் டோனி 2 ரன்களிலும் வெளியேறினர். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 88 ரன்கள் மட்டுமே எடுத்தது. மலிங்கா வீசிய 16 ஓவரில் பிராவோ ஒரு சிக்சர் வாட்சன் 3 பவுண்டரிகள் அடிக்க சென்னை அணி 16 ஓவரில் 108 ரன்கள் குவித்தது. வாட்சனுக்கு 3 கேட்சகளை தவற விட்டனர் மும்பை இந்தியன்ஸ் அணி.

சென்னை அணிக்கு 18 பந்துகளில் 38 ரன்கள் தேவைப்பட்டது. குர்ணால் பாண்டியா வீசிய 17-வது ஓவரில் வாட்சன் 3 சிக்ஸ் விளாசினார். இதனால் சென்னை அணிக்கு 12 பந்துகளில் 18 மட்டுமே தேவைப்பட்டது.

கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் கடைசி ஓவரின் 3-வது பந்தில் வாட்சன் ரன் அவுட் ஆனார். இதனால் கடைசி 2 பந்துகளுக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது சர்துல் தாகூர் 2 ரன்கள் அடிக்க கடைசி பந்துக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது சர்துல் தாகூர் அவுட் ஆனார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *