Tamilசெய்திகள்

தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்

பாராளுமன்ற தேர்தலில் 6-வது கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்து முடிந்துள்ளது. கடைசி கட்ட தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.

23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் பா.ஜனதா மீண்டும் ஆட்சி கட்டிலில் அமருமா? இல்லை அதற்கு மாற்றாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆட்சி அமையுமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

இந்த தேர்தலில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் மாநில கட்சிகள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும் வகையில் தனித்து போட்டியிட்டுள்ளன. அந்த வகையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 3-வது அணியை அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி உள்ளார்.

தேர்தலுக்கு முன்பே இது தொடர்பான முயற்சிகளில் அவர் வேகம் காட்டினார். சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கடந்த சில மாதங்களுக்கு முன்பே சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். பல்வேறு மாநில கட்சிகளின் தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டார். ஆனால் தேர்தலுக்கு முன்னர் 3-வது அணி முழுமை அடையவில்லை.

இந்த நிலையில் தெலுங்கானா முதல்வரான சந்திரசேகர ராவ் 3-வது அணியை அமைக்கும் முயற்சியில் மீண்டும் தீவிரம் காட்டிவருகிறார். சென்னையில் இன்று மாலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பே சந்திரசேகர ராவ் மு.க.ஸ்டாலினை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததால் சந்திப்பு நடைபெறவில்லை.

மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக திருச்சியில் இருந்து தனி விமானத்தில் சந்திரசேகர ராவ் இன்று சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு செல்லும் அவர் மாலை 4.30 மணி அளவில் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் அனைத்து மாநிலங்களிலும் மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க முடியவில்லை. இதனால் மம்தா பானர்ஜி, மாயாவதி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களும் தனித்தே களம் இறங்கி உள்ளனர். இப்படி பல மாநிலங்களில் மாநில கட்சிகளை பா.ஜனதாவுக்கு எதிராக ஒருங்கிணைக்க காங்கிரஸ் தவறிவிட்டதாகவே குற்றச்சாட்டு உள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்து இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மோடி மீண்டும் பிரதமர் ஆனால் அதற்கு ராகுல்காந்தியே முழுபொறுப்பு என்று கூறி இருந்தார். இப்படி பிரிந்து நிற்கும் மாநில கட்சிகள் தேர்தலுக்கு பிறகு 3-வது அணியை உருவாக்கி பா.ஜனதா, காங்கிரஸ் இல்லாத புதிய அரசை அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த 3-வது அணிக்கு வலுசேர்ப்பதற்காகவே சந்திரசேகர ராவ் காய் நகர்த்தி வருகிறார். இதற்கான முயற்சியாகவே மு.க.ஸ்டாலினுடனான இந்த சந்திப்பு என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மு.க.ஸ்டாலின், சந்திரசேகர ராவ் இருவரும் தங்களது சந்திப்பின்போது தேர்தலுக்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கிறார்கள். 3-வது அணி பற்றியும் ஆலோசிக்கிறார்கள். மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பிறகு சந்திரசேகர ராவ் மேலும் பல தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இடம்பெற்றுள்ளது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் ஏற்கனவே முன்மொழிந்துள்ளார். எனவே காங்கிரஸ் அல்லாத 3-வது அணியில் தி.மு.க. இடம்பெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

இதனால் இன்றைய இருவரது சந்திப்பும் மரியாதை நிமித்தமான சந்திப்பாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *