தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும்! – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்திரி வெயில் 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. பகல் நேரத்தில் அனல்காற்று வீசி வருகிறது. வெளியில் செல்ல முடியாத அளவுக்கு உஷ்ணம் அதிகமாக இருப்பதால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கிறார்கள்.
வீடுகளிலும் வெப்பக்காற்று வீசுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த அனல்காற்று இன்றும், நாளையும் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை மழை பெய்யாததால் வெயிலின் தாக்கம் அதிகமாக தெரிகிறது. மழை பெய்தால் மட்டுமே தாக்கம் குறையும். மற்றபடி வெயிலின் உக்கிரம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும். இது மேலும் உள்நோக்கி வந்தால்தான் சென்னைக்கு மழை. உள் மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.