Tamilசெய்திகள்

நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் முடிவு

விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன.

இந்த தொழில் போட்டியில் கிங் பிஷர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்தன. அவ்வகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

இதனால், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து குத்தகை அடிப்படையில் வாங்கி இயக்கும் பல விமானங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்த முடியாமல் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கடன் வைத்துள்ளது.

அவ்வகையில், 119 விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் பல விமானங்களை இயக்காமல் நிறுத்தி விட்டது. குறிப்பாக, 157 உயிர்களை பறித்த எத்தியோப்பியா விமான விபத்துக்கு பின்னர் போயிங் 737 மேக்ஸ்-8 ரகத்தை சேர்ந்த 12 விமானங்களை தரையிறக்கி நிரந்தரமாக நிறுத்தி விட்டது.

இதுதவிர, வேறுசில காரணங்களுக்காக மேலும் பல விமானச் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. 16 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

போதிய பணப்புழக்கம் இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.

ஜெட் ஏர்வேஸ் விரைவில் சம்பள பாக்கியை வழங்காமல் போனால் ஏப்ரல் 15-ம் தேதியில் இருந்து விமானங்களை ஓட்டாமல் அந்நிறுவனத்தின் விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று இந்திய விமானிகள் சங்கம் முன்னர் எச்சரித்திருந்தது.

இதை நினைவூட்டும் வகையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள், பணிப்பெண்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்குள் நேற்று அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், ஏற்கனவே அறிவித்திருந்தபடி நாளை (15-ம் தேதி) காலை 10 மணி முதல் ஜெட் ஏர்வேஸ் விமானிகளின் போராட்டம் தொடங்கும். சுமார் 1100 விமானிகள் இந்த தொடர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *