டோனியிடம் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டேன் – தீபக் சாஹர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக தீபக் சாஹர் விளங்கி வருகிறார். புதுப்பந்தில் சிறப்பாக ஸ்விங் செய்பவர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக கடைசி ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு நோ-பால் வீசியதால் டோனியிடம் திட்டு வாங்கினார்.
ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக 3 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். என்னுடைய ஆட்டம் குறித்து டோனியுடன் விவாதிப்பதால்தான் இந்த ரிசல்ட் கிடைத்துள்ளது என்று சாஹர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தீபக் சாஹர் கூறுகையில் ‘‘சென்னையில் நாங்கள் அதிகமான போட்டிகளில் விளையாடப் போகிறோம் என்பது எனக்குத் தெரியும். வீரர்களின் ஓய்வு அறையில் டேபிள் டென்னிஸ் விளையாடும்போது எம்எஸ் டோனியுடன் அதிக அளவில் நேரத்தை செலவழித்துள்ளேன். அப்போது அவரிடம் இருந்து ஏராளமான விஷங்களை கற்றுக் கொண்டேன்.
பொதுவாகவே நான் புதுப்பந்தில் தொடர்ச்சியாக நான்கு ஓவர்களை வீசி முடித்துவிடுவேன். தற்போது பிராவோ காயத்தில் உள்ளதால், டெத் ஓவர் வீசும் வாய்ப்பு கிடைத்துள்ளது’’ என்றார்.