அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி மீது தொடரும் பாலியல் புகார்கள்
அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, 2009-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுவரை துணை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் ஜோ பிடன். இவர் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்குவதற்கு பரிசீலித்து வருகிறார். இந்த நிலையில், பெண்கள் சிலர் ஜோ பிடன் மீது அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர்.
நெவேடா மாகாண சட்டசபையின் முன்னாள் உறுப்பினரான லூசி புளோரஸ் (வயது 39), ஜோ பிடெனின் முன்னாள் உதவியாளரான எமி லேப்போஸ் (43) உள்பட 4 பெண்கள் ஜோ பிடென், அனுமதியின்றி தங்களை தொட்டதாகவும், வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்ததாகவும் குற்றம் சுமத்தி இருந்தனர்.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையின் முன்னாள் ஊழியரான வைல் கோனெர்ட், ஜனநாயக கட்சியின் முன்னாள் உறுப்பினர் யாலி கோல் மற்றும் சோபி காரசிக் ஆகிய மேலும் 3 பெண்கள் ஜோ பிடென் தங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்.
முன்னாள் துணை ஜனாதிபதி மீது அடுத்தடுத்து 7 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி இருப்பது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.