ஐபிஎல் கிரிக்கெட் – அதிவேகமாக 4 ஆயிரம் ரன்களை கடந்து கிறிஸ் கெய்ல் சாதனை
ஐபிஎல் 2019 சீசனில் 4-வது லீக் ஆட்டம் இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
கிறிஸ் கெய்ல் 6 ரன்கள் எடுத்தபோது ஐபிஎல் போட்டியில் 4 ஆயிரம் ரன்களைத் தொட்டார். இதன்மூலம் 4 ஆயிரம் ரன்கள் அடித்த 9-வது வீரர் என்ற பெருமையையும், 2-வது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன் டேவிட் வார்னர் 4 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.
4 ஆயிரம் ரன்களை கடக்க கிறிஸ் கெய்லுக்கு 112 இன்னிங்ஸ் மட்டுமே தேவைப்பட்டது. இதன்மூலம் அதிவேகமாக 4 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். டேவிட் வார்னர் 114 இன்னிங்சிலும், விராட் கோலி 128 இன்னிங்சிலும், ரெய்னா மற்றும் காம்பீர் தலா 140 இன்னிங்சிலும் 4 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.