பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மகத்தான வெற்றி பெறும் – சந்திரபாபு நாயுடு நம்பிக்கை
பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி 7 கட்டங்களாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் உள்ள ஓங்கோல் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆந்திராவில் 5 ஆண்டுகால தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியில், ஆதாரனா மற்றும் ஆதாரனா 2 திட்டங்களின் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவி உயர்த்தப்பட்டது. அண்ணா உணவகத்தின் மூலம் ரூ.5க்கு சத்தான சிற்றுண்டி உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.1000 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நல்ல முறையில் நாங்கள் அரசினை வழி நடத்தி வருகின்றோம். கிராமப்பகுதிகளில் வசிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல உதவி ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டது. அன்னதட்டா சுகிபவா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கும் நிதி உதவியினையும் நீட்டித்துள்ளோம்.
இதுபோன்ற நல்ல திட்டங்களை அமல்படுத்தி தொடர்ந்து ஆந்திர மக்களின் நலனுக்காக பணியாற்றி வருகிறோம். எனவே, இந்த திட்டங்களின் மூலம் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.