Tamilவிளையாட்டு

பார்முலா 1 கார் பந்தய போட்டி – ஆஸ்திரேலிய கிராண்ட்பிரியில் வால்டெரி போட்டோஸ் முதலிடம்

உலகின் மிகப்பெரிய கார்பந்தய போட்டியான பார்முலா 1 கார்பந்தயம் இந்த ஆண்டு 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே 25, 18, 15, 12, 10, 8, 6, 4, 2, 1 வீதம் புள்ளி வழங்கப்படும். ரேசின் போது ஒரு சுற்றை அதிவேகமாக கடக்கும் வீரருக்கு போனசாக ஒரு புள்ளி வழங்குவது இந்த முறை புதிதாக அறிமுகம் ஆகிறது. 21 சுற்று முடிவில் அதிக புள்ளிகள் குவிக்கும் வீரர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வார்.

இந்த சீசனுக்குரிய முதலாவது சுற்றான ஆஸ்திரேலிய கிராண்ட்பிரி, மெல்போர்ன் நகரில் நேற்று நடந்தது. இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். பந்தய தூரமான 307.574 கிலோமீட்டர் இலக்கை பின்லாந்து வீரர் வால்டெரி போட்டோஸ் (மெர்சிடஸ் அணி) 1 மணி 25 நிமிடம் 27.35 வினாடிகளில் கடந்து வெற்றி பெற்றார். அத்துடன் குறிப்பிட்ட சுற்றை வேகமாக கடந்த வகையில் அவர் மொத்தம் 26 புள்ளிகளை தட்டிச் சென்றார்.

5 முறை சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) அவரை விட 20.886 வினாடி மட்டுமே பின்தங்கி 2-வதாக வந்து 18 புள்ளிகளை பெற்றார். நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பான் (ரெட்புல் அணி) 3-வது இடத்தையும், முன்னாள் சாம்பியன் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் 4-வது இடத்தையும் பிடித்தனர். விபத்து மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 3 வீரர்கள் பாதியிலேயே விலகினர்.

பார்முலா1 பந்தய இயக்குனர் சார்லி ஒயிட்டிங் (இங்கிலாந்து) உடல்நலக்குறைவால் 3 நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவருக்கு இந்த வெற்றியை அர்ப்பணிப்பதாக 29 வயதான போட்டோஸ் கூறினார். 2-வது சுற்று போட்டி பக்ரைனில் வருகிற 31-ந்தேதி நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *