நடிகை ஓவியா மீது மீண்டும் போலீசில் புகார்!
களவாணி படம் மூலம் அறிமுகமானவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலம் அடைந்தார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் அவர் நடித்த படம் 90 எம்.எல். அனிதா உதீப் இயக்கிய இந்த படத்தில் ஆபாச காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் இடம்பெற்று இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. ஓவியா மீதும் இயக்குனர் மீதும் போலீசில் புகார்கள் கொடுக்கப்பட்டன.
90 எம்.எல். படத்துக்காக ஓவியா மீது நேற்று கமிஷனர் அலுவலகத்தில் இன்னொரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திருவேற்காட்டை சேர்ந்த தமிழ்வேந்தன் என்பவர் அந்த புகாரை கொடுத்துள்ளார். புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:-
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக சித்தரவதை செய்யப்பட்டுள்ளனர். முகநூல், டுவிட்டர் மூலமாக அவர்களுக்கு காதல் வலை வீசி திருமண ஆசை காட்டி அந்த பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு உள்ளிட்டோர் நடந்து கொண்ட விதம் மனித இனத்திற்கே அவமானம்.
தமிழகத்தில் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் வகையில் படங்கள் எடுக்கப்படுவது அதைவிட கேவலம். கடந்த மார்ச் 1-ந் தேதி அனிதா உதீப் இயக்கிய 90 எம்.எல். படம் வெளியானது. அந்த படத்தில் நடிகை ஓவியா அருவருக்கத்தக்க வகையில் நடித்து இருந்தார்.
புகைப்பது, ஆண் நண்பருடன் உதட்டோடு உதடு முத்தமிடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுதான் பெண்ணியம் என்றும் கற்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக கலாசாரத்தை சீர்குலைக்கும் விதமாகவும் பெண்களை தவறாக வழி நடத்தக்கூடிய வகையிலும் 90 எம்.எல். படத்தை இயக்கிய அனிதா உதீப், அதில் நடித்த ஓவியா உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும்’.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.