இந்தியாவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் தாக்குதல் நடத்தினர் – முஷரப் தகவல்
காஷ்மீரில் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பலியாயினர். அதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் வந்த அழுத்தம் காரணமாக ஜெய்ஷ் இ முகமது அமைப்பினருக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அந்த அமைப்பின் நிறுவனரான மசூத் அசாரின் மகன், சகோதரன் உள்பட 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருப்பது குறித்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர் ‘என் பதவிக்காலத்தில் உளவு நிறுவனங்கள் உத்தரவின்பேரில் இந்தியாவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். என்னை கொல்வதற்கு 2 முறை முயற்சித்தனர். அந்த அமைப்பினர் மீது நடவடிக்கை எடுப்பது நல்லதொரு நடவடிக்கை” என குறிப்பிட்டார்.
“அப்படியென்றால், உங்கள் பதவிக்காலத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என கேள்வி எழுப்பியபோது, அதற்கு முஷரப், “அப்போது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பழிக்குப் பழி என்ற நிலை நிலவியது. அதற்கு மத்தியில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வில்லை. அதை நான் வலியுறுத்தவும் இல்லை” என்றார்.