தடம்- திரைப்பட விமர்சனம்
100 குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது, என்பதற்காகவே சட்டத்தில் ஓட்டைகள் இருக்க, அதே ஓட்டைகளால் குற்றவாளிகளும் எப்படி தப்பிக்கிறார்கள், என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படமாக சொல்லியிருக்கும் இந்த ‘தடம்’ எப்படி என்பதை பார்ப்போம்.
கெவின், எழில் என இரண்டு வேடங்களில் அருண் விஜய் நடித்திருக்கிறார். ஒருவர் கட்டுமான பொறியாளர், மற்றொருவர் ஏமாற்று வேலை, திருட்டு, சீட்டாட்டம் என்று வாழ்ந்து வருகிறார். இவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளவில்லை என்றாலும், இருவரும் அச்சு அடித்தாற்போல் அப்படியே இருக்கிறார்கள்.
எழில் தனது சேமிப்புகளை வைத்து சொந்தமாக கட்டுமான நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் வீடுகளை கட்டி வர, அவரது வாழ்வில் காதல் குறுக்கிடுகிறது. காதலியை விரைவில் கரம் பிடிக்க வேண்டும் என்றும் விரும்புகிறார். இவருக்கு எதிர்மறையான வாழ்வை வாழ்ந்துக் கொண்டிருக்கும் கெவின் சீட்டாட்டத்தில் பல லட்சங்களை இழந்து கடனாளியாகிறார். அவருக்கு பணம் கொடுத்த ரவுடி பணத்தை வசூலிக்க அவரது நண்பரை கடத்தி சென்று, கெவினுக்கு ஒரு நாள் அவகாசம் கொடுக்கிறார். அந்த ஒரு நாளுக்குக்குள் 9 லட்சம் ரூபாய் பணத்தை கொடுக்கவில்லை என்றால், தனது நண்பனை உயிரோடு பார்க்க முடியாது என்பதால், பணம் புரட்டும் முயற்சியில் ஈடுபடும் கெவின் இளைஞர் ஒருவரை கொலை செய்கிறார். அந்த கொலை குறித்து விசாரணையை தொடங்கும் போலீஸுக்கு கெவின் அந்த வீட்டில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று கிடைக்க, அதை வைத்து அவர்கள் எழிலை கைது செய்துவிடுகிறார்கள்.
தன்னை எதற்காக போலீஸ் கைது செய்திருக்கிறது என்று தெரியாமல் எழில் யோசிக்க, போலீஸ்காரர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், எழிலை போலவே இருக்கும் கெவினும் போலீசிடம் சிக்க, கொலை செய்யப்பட்டவரின் வீட்டில் இருப்பவர் எழிலா அல்லது கெவினா என்று குழப்பமடையும் போலீசார், அவர்களிடம் நடத்தும் விசாரணையாலும் பெரும் குழப்பமடைய, ஒரு கட்டத்தில், கொலை செய்யப்பட்டவரின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட கொலையாளியின் முடியை வைத்து டி.என்.ஏ பரிசோதனை செய்தால், கெவின் மற்றும் எழில் இருவருடைய டி.என்.ஏ-வும் ஒன்றாக இருப்பது போலீசாரை மேலும் குழப்பமடைய செய்கிறது. இறுதியில் உண்மையான கொலையாளியை போலீஸ் கண்டுபிடித்ததா இல்லையா, கொலை செய்தது கெவினா, எழிலா, எதற்காக கொலை செய்தார்கள், என்பது தான் ‘தடம்’ படத்தின் மீதிக்கதை.
திரைக்கதை யுக்தி மூலம் ஒரு படத்தை மக்கள் மனதில் எப்படி ஆழமாக பதிய வைக்கலாம் என்பதை இந்த ‘தடம்’ மூலம் மீண்டும் ஒரு முறை இயக்குநர் மகிழ்திருமேணி நிரூபித்திருக்கிறார்.
படத்தின் ஆரம்பம் முதல் முடியும் வரை பல ட்விஸ்ட்டுகள், அனைத்தும் நம்மை சீட் நுணியில் உட்கார வைத்து நகம் நடிக்க வைத்துவிடுகிறது.
கெவின், எழில் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் அருண் விஜய், தனது கடினமான உழைப்பை கச்சிதமாக கொடுத்திருக்கிறார். லுக்கில் எந்தவித மாற்றமும் இல்லை என்றாலும், அவரது நடிப்பும், ஆக்ஷனும் அசர வைக்கிறது. கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பவர், எந்த இடத்திலும் ஓவர் டோசஜ் இல்லாமல் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி கெவின் மற்றும் எழில் இரண்டு வேடங்களையும் ரசிக்க வைத்துவிடுகிறார்.
தன்யா ஹோப், ஸ்மிருதி, வித்யா பிரதீப் என மூன்று ஹீரோயின்களும் குறைவான இடங்களில் மட்டுமே ஸ்கோர் செய்திருந்தாலும் அதை நிறைவாகவே செய்திருக்கிறார்கள். கதாநாயகனுக்கு ஜோடியாக அல்லாமல் கதையின் நாயகிகளாகவே இவர்கள் நடித்திருக்கிறார்கள் என்பது படத்திற்கு கூடுதல் பலம்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பெப்ஸி விஜயன், யோகி பாபு, மீரா கிருஷ்ணன், ஜார்ஜ் என்று படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். காமெடிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் யோகி பாபு கூட படத்தில் குணச்சித்திர நடிகரை போல பர்பாமன்ஸ் செய்திருக்கிறார்.
பணத்திற்காக கெவின் கொலை செய்துவிட்டார் என்று படம் பார்ப்பவர்களை நம்ப செய்யும் இயக்குநர், அடுத்தடுத்த காட்சிகளில், எழில் கூட இந்த கொலையை செய்திருக்கலாமோ! என்று யோசிக்க வைக்கும்படி தனது திரைக்கதையை கச்சிதமாக வடிவமைத்திருக்கிறார். படம் பார்ப்பவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக அருண் விஜய் வரும் சில இடங்களில் எழில், கெவின் என்று பெயர் போட்டு காட்டுபவர், படத்தின் ஆரம்பத்தில் இருவரும் ஒருவர் தானோ, என்றும் நம்மை யோசிக்க வைக்கும் அளவுக்கு காட்சிகளை படு சஸ்பென்ஸாக நகர்த்துகிறார்.
திடீரென்று பிளாஷ்பேக், அம்மா மகன் செண்டிமெண்ட் என்று திரைக்கதையை திசை மாறும் போது மட்டும் படம் சற்று நொண்ட தொடங்குகிறது. இருந்தாலும், அந்த அம்மா செண்டிமெண்ட் காட்சி தான், ”சரியான பெண்ணாக இல்லை என்றாலும், தனக்கு நல்ல அம்மாவாக இருந்தார்” என்று ஹீரோ தனது அம்மாவை பற்றி பேசுவதற்கு பக்கபலமாக இருக்கிறது. இருந்தாலும், அந்த எப்பிசோட்டை அவ்வளவு பெருஷாக நீட்டியிருப்பதை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். குறை என்றால் இது ஒன்று மட்டுமே, மற்றபடி படம் படு வேகமான, அதே சமயம், நாம் யூகிக்க முடியாத அளவுக்கு சஸ்பென்ஸும், ட்விஸ்ட்டும் நிறைந்ததாக நகர்கிறது.
ஒளிப்பதிவாளர் கோபிநாத்தும், இசையமைப்பாளர் அருண் விஜயும் படத்தில் தங்களது தடத்தை மிக அழுத்தமாகவே பதிய வைத்திருக்கிறார்கள். இரட்டை வேடம் என்றாலே ஒளிப்பதிவாளர்கள் ஓவர் டைம் ஒர்க் செய்ய வேண்டியது இருக்கும். அதிலும், அந்த வேலை கச்சிதமாக இருந்தால் தான் கதாபாத்திரங்களும் படம் பார்ப்பவர்கள் மனதில் நிற்கும். அதனை ரொம்ப சரியாகவே கோபிநாத் செய்திருக்கிறார். அதிலும், போலீஸ் ஸ்டேஷன் சண்டைக்காட்சியில் அவரது கேமரா காட்டிய ஈடுபாட்டுக்கு எக்கச்சக்கமாக பாராட்டலாம்.
சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும், என்று சொல்லும் அளவுக்கு திரைக்கதையையும், காட்சிகளையும் கச்சிதமாக வடிவமைத்த இயக்குநர் மகிழ்திருமேணி, நடிகர்கள் தேர்வு, அவர்களிடம் இருந்து வேலை வாங்கிய விதம் போன்றவற்றிலும் காட்டியிருக்கும் நேர்த்தி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில், ‘தடம்’ ரசிகர்கள் மனதில் மிக அழுத்தமாக பதிந்திவிடும் ஒரு பர்பெக்ட் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்.
-ஜெ.சுகுமார்