எல்.கே.ஜி- திரைப்பட விமர்சனம்
காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி சொந்தமாக கதை, திரைக்கதை எழுதி ஹீரோவாக களம் இறங்கியிருக்கும் ‘எல்.கே.ஜி’ எப்படி என்பதை பார்ப்போம்.
‘லால்குடி கருப்பையா காந்தி’ என்ற ஆர்.ஜே.பாலாஜியின் கதாபாத்திர பெயரின் சுருக்கமே ‘எல்.கே.ஜி’.
40 வருடங்கள் அரசியலில் இருந்தும் சம்பாதிக்காமலும், பதவியில் இல்லாமலும், தோற்றுப் போன அரசியல்வாதியாக இருக்கும் தனது தந்தையை போல அல்லாமல், அரசியலில் பணம் சம்பாதிப்பதோடு, பல வெற்றிகளையும் குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பயணிக்கும் வார்டு கவுன்சிலரான ஆர்.ஜே.பாலாஜி, தனது தில்லாலங்கடி வேலையினால் இளம் வயதிலேயே முதல்வராவது தான் படத்தின் கதை. என்ன செய்தால் அரசியலில் வெற்றி பெறலாம் என்பதை அவரிடம் பணம் பெற்றுக் கொண்டு சொல்லிக் கொடுக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தை சேர்ந்தவராக பிரியா ஆனந்த் நடித்திருக்கிறார்.
பிரியா ஆனந்தின் ஐடியா படியும், தனது சொந்த ஐடியா படியும், ஆர்.ஜே.பாலாஜி எதையெல்லாம், எப்படி செய்து முதல்வராகிறார் என்பதை சமகால அரசியல் நிகழ்வுகளை கலாய்த்தபடி சொல்லியிருப்பது தான் ‘எல்.கே.ஜி’ படத்தின் முழுக்கதை.
சினிமா தெரியாவர்கள் பலர் எதை எதையோ, எப்படி எப்படியோ சொல்லி சில நேரங்களில் ஜெயிப்பதுண்டு, அப்படி தான் அரசியலை பற்றி தெரியாத ஆர்.ஜே.பாலாஜியும், அவரது குழுவினரும் அரசியல் நையாண்டி படத்தை எடுத்திருக்கிறார்கள். அதற்கு உதாரணம், அமைச்சர் சொல்லியே நடக்காத கார்ப்பரேஷன் வேலைகள் கவுன்சிலர் சொன்னதும் நடப்பது போல வைத்த காட்சி தான்.
அதாவது, கதையின் நாயகனாக களம் இறங்குகிறேன், என்ற பெயரில் தன்னை ஹீரோவாக காட்டிக் கொள்வதற்காகவே ஆர்.ஜே.பாலாஜி இந்த கதையை எழுதியிருக்கிறார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
கார்ப்பரேட் பெண்மணியாக நடித்திருக்கும் பிரியா ஆனந்த், இதுபோன்ற படங்களை தொடர்ந்து தேர்வு செய்தால், ஹீரோயின்களின் தோழியாக நடிக்க வேண்டியது தான். அந்த அளவுக்கு அவரது வேடம் டம்மியாக உள்ளது.
பாலாஜியின் அப்பாவாக நடித்திருக்கும் நாஞ்சில் சம்பத் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அவரது கதாபாத்திரத்தை குறைவான அளவே பயன்படுத்தியிருக்கிறார்கள். அரசியல் கட்சியின் தலைவராக நடித்திருக்கும் ராம்குமார் கம்பீரமாக இருந்தாலும், அவரை சரியாக பயன்படுத்தாமல் விட்டிருப்பதால் அவரும் காமெடி பீஸாகிவிடுகிறார்.
காமெடி வேடமாக அறிமுகப்படுத்தப் பட்டாலும் ஜே.கே.ரித்திஷின் வேடமும், அவரது நடிப்பும் ரசிக்க வைக்கிறது.
லியோன் ஜேம்ஸின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். விது அய்யன்னாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
கதை மற்றும் திரைக்கதையாசிரியராக சில அரசியல் நிகழ்வுகளை கிண்டலடித்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, தமிழகர்களை பெருமையடைய செய்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை மறைமுகமாக கலாய்த்திருக்கிறார். அதேபோல், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி நடத்திய போராட்டத்தின் போது, சென்னையில் கிரிக்கெட் விளையாட்டை நடைபெறாமல் தடுத்ததையும் கலாய்த்திருப்பவர், தமிழகத்தில் சில கட்சிகள் பேசி பேசியே ஆட்சியை பிடிக்கிறார்கள், என்பதையும் அழுத்தமாக சொன்னாலும், தீர்வை மட்டும் க்ளைமாக்ஸில் சில நிமிட காட்சியில் வசனங்களாக மட்டுமே சொல்லி முடித்துக் கொள்கிறார்.
பாலாஜியின் கதை மற்றும் திரைக்கதைக்கு காட்சிகளை வடிவமைத்து இயக்கியிருக்கும் பிரபு, பல இடங்களில் பாலாஜிக்கு கடிவாளம் போட்டு அவரை அடக்கியிருப்பதோடு, படத்தை நேர்த்தியான கமர்ஷியல் படமாக்கவும் முயற்சித்திருக்கிறார். இருந்தாலும், சட்டியில் இருந்தது தான் அகப்பையில் வந்திருக்கிறது.
ஆபாசமாக படம் எடுத்தால் நல்லா கல்லா கட்டலாம், என்பதை சில படங்கள் நிரூபித்தது போல, லாஜிக் பார்க்காமல், அதே சமயம் காமெடியாக எதை எப்படி சொன்னாலும் கல்லா கட்டலாம் என்பதை மனதில் வைத்து இப்படத்தின் கதையை எழுதியிருக்கும் பாலாஜி, படத்தில் அவர் இருக்கும் கட்சியின் பெயரை கூட சொல்லாதது பெருத்த ஏமாற்றம்.
மொத்தத்தில், ‘எல்.கே.ஜி’ ரசிகர்களை சிரிக்க வைத்த அளவுக்கு சிந்திக்க வைக்கவில்லை.
-ஜெ.சுகுமார்