குடிக்க பணம் கொடுக்காததால் தந்தையை கொன்றேன்! – மகன் வாக்குமூலம்
கோவை இருகூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது70). இவர் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் பெற்ற சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பத்மாவதி.
இவர்களது மகன் செந்தில் குமாருக்கு(40) கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்துவேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.இதனால் செந்தில்குமார் பெற்றோருடன் வசித்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி பெற்றோருடன் தகராறு செய்துள்ளார்.
நேற்று மாலை பத்மாவதி வெளியே சென்றிருந்தார். அப்போது செந்தில்குமார் தனது தந்தையிடம் குடிக்க பணம் கேட்டார். அவர் பணம் கொடுக்க மறுத்ததோடு, மகனை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த செந்தில்குமார் கத்தியால் சுப்பிரமணியின் நெஞ்சு, இடுப்பு உள்ளிட்ட இடங்களில் குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையை கொலை செய்த சுப்பிரமணி அப்பகுதியில் சுற்றித்திரிந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரது கையில் காயங்கள் இருந்தது. அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
செந்தில்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் கூறியதாவது:-
நான் மதுகுடிப்பதற்காக எனது தந்தையிடம் பணம் கேட்டேன். ஆனால் அவர் பணம் தரவில்லை. மாறாக, எந்த வேலைக்கு செல்லாமல் இவ்வாறு சுற்றுகிறாயே என என்னை கண்டித்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே வீட்டில் இருந்த கத்தியால் அவரை குத்தினேன். இதில் அவர் இறந்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதனை வாக்கு மூலமாக போலீசார் பதிவு செய்தனர்.
இன்று அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.